கோவில்பட்டியில் ஆட்டோ டிரைவருக்கு கொலை மிரட்டல் விடுத்த 4 பேர் கைது

கோவில்பட்டியில் ஆட்டோ டிரைவருக்கு கொலை மிரட்டல் விடுத்த 4பேர் கைது செ்ய்யப்பட்டனர்.

Update: 2021-06-03 15:43 GMT
கோவில்பட்டி:
கோவில்பட்டி இந்திரா நகரைச் சேர்ந்தவர் பிச்சையா மகன் ரமேஷ் (45). ஆட்டோ ஓட்டுனரான இவர் பசுவந்தனை சாலையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளி முன்பு சென்று கொண்டிருந்த போது வாலிபர்கள் 4 பேர் ஆட்டோவை வழிமறித்து, அவதூறாகப் பேசி கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்குச் சென்ற மேற்கு காவல் நிலைய போலீசார் 4 வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கோவில்பட்டி கருணாநிதி நகரைச் சேர்ந்த முருகேசன் மகன் சக்திவெங்கடேஷ் (24), அதே பகுதியைச் சேர்ந்த ஆனந்தகிருஷ்ணன் மகன் மதன்குமார் (19), கருப்பசாமி மகன் மணிகண்டன் (19) மற்றும் ஜோதி நகர் 3ஆவது தெருவைச் சேர்ந்த கந்தமுருகன் மகன் சீனிவாசன் (27) என்பது தெரியவந்தது. இதுகுறித்து மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து, ஆட்டோ ஓட்டுனரை வழிமறித்து அவதூறாகப் பேசி கொலை மிரட்டல் விடுத்த 4 பேரையும் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்