மும்பையில் நகை கடைக்காரரிடம் ரூ 1¼ கோடி தங்கம் பறிப்பு; போலீஸ்காரர் உள்பட 4 பேர் கைது
நகைக்கடைக்காரரை மிரட்டி ரூ.1.25 கோடி தங்கத்தை பறித்து சென்ற போலீஸ்காரர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
தங்ககட்டிகள்
மும்பையை சேர்ந்தவர் பரத் ஜெயின்(வயது56). நகைக்கடை நடத்தி வருகிறார். இவர் சம்பவத்தன்று ஆர்டரின் பேரில் 2 கிலோ 480 கிராம் எடையுள்ள ரூ.1 கோடியே 25 லட்சம் மதிப்புள்ள தங்ககட்டிகளை ஒருவருடன் மோட்டார் சைக்கிளில் எடுத்து சென்றார். அப்போது வழியில் 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 பேர் தாங்கள் போலீசார் எனக்கூறி சோதனை நடத்தினர்.பின்னர் அவர் வைத்திருந்த தங்ககட்டிகள் அடங்கிய பையை பறித்து கொண்டு தப்பி சென்றனர். இதனால் பாதிக்கப்பட்ட பரத் ஜெயின் சம்பவம் குறித்து பைகுல்லா போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் படி போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவம் நடந்த இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். இதில் வாகன பதிவெண் மூலம் 4 பேரின் அடையாளம் தெரியவந்தது.
கைது
இதில் நய்காவ் ஆயுதப்படையில் போலீஸ்காரராக பணிபுரிந்து வரும் கலீல் காதர் சேக்(வயது47) மற்றும் கூட்டாளிகள் ரவீந்திர குஞ்சுகர்வே(36), சந்தோஷ் நாக்தே(27) மற்றும் ஒருவர் லால்பாக் நகைக்கடை மேலாளர் என தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 4 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து 1 கிலோ 45 கிராம் எடையுள்ள தங்க கட்டிகள், 2 மோட்டார் சைக்கிள்கள், 4 செல்போன்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.