சென்னை மாநகராட்சி பகுதிகளில் இதுவரை 20 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன - கமிஷனர் ககன்தீப் சிங் பேடி தகவல்

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இதுவரை 20 லட்சத்து 23 ஆயிரத்து 145 தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு இலவசமாக போடப்பட்டு உள்ளதாக மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

Update: 2021-06-03 06:56 GMT
சென்னை,

மத்திய மற்றும் மாநில அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றி பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பொது மக்களை பாதுகாக்கும் வகையில் மாநகராட்சியின் நகர்ப்புற சமுதாய ஆஸ்பத்திரிகள், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் தடுப்பூசி சிறப்பு முகாம்களின் மூலம் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

தற்போது 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தற்போதைய தடுப்பூசி இருப்பை கருத்தில்கொண்டு, சிலருக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி போடப்படுகிறது.

அதன்படி சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இதுநாள் வரை 14 லட்சத்து 47 ஆயிரத்து 392 பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 5 லட்சத்து 75 ஆயிரத்து 753 பேருக்கு 2-வது தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டு இருக்கிறது. அந்தவகையில் இதுவரை (கடந்த மாதம் 31-ந்தேதி வரையிலான நிலவரப்படி) 20 லட்சத்து 23 ஆயிரத்து 145 தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு இலவசமாக செலுத்தப்பட்டு இருக்கிறது.

பொதுமக்கள் அனைவரும் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து உயிர்காக்கும் ஆயுதமான தடுப்பூசியை செலுத்தி தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்