சேலம் பெரமனூரில் பரபரப்பு கொரோனா நோயாளிகள் சிகிச்சைக்கு வர மறுப்பு மாநகராட்சி அதிகாரிகளுடன் வாக்குவாதம்
சேலம் பெரமனூரில் கொரோனா நோயாளிகள் சிகிச்சைக்கு வர மறுத்து மாநகராட்சி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
சேலம்:
சேலம் பெரமனூரில் கொரோனா நோயாளிகள் சிகிச்சைக்கு வர மறுத்து மாநகராட்சி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
சிகிச்சைக்கு வர மறுப்பு
சேலம் பெரமனூர் கோவிந்த கவுண்டர் தோட்டம் காட்டுவளவு பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனாவுக்கு மூதாட்டி ஒருவர் உயிரிழந்தார். இதையடுத்து அந்த மூதாட்டியின் குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அப்போது அந்த குடும்பத்தை சேர்ந்த 4 பேருக்கு நோய் தொற்று இருப்பது நேற்று காலையில் தெரியவந்தது. இதுகுறித்து தகவலறிந்த மாநகராட்சி ஊழியர்கள் அந்த குடும்பத்தை சேர்ந்தவர்களை தொடர்பு கொண்டு உங்களுக்கு நோய் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. எனவே அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வாருங்கள் என கேட்டுக்கொண்டனர்.
ஆனால் அவர்கள் வர மறுத்து மாநகராட்சி அலுவலர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் நாங்கள் அனைவரும் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்கிறோம் என்றும் தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
மக்கள் பீதி
இதையடுத்து பள்ளப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களிடம் சிகிச்சைக்கு செல்லுங்கள் என அறிவுறுத்தினர். ஆனால் அந்த வீட்டை சேர்ந்தவர்கள் வெளியே வராமல் வீட்டிற்குள்ளேயே இருந்தனர்.
இதனிடையே, அந்த பகுதியை சேர்ந்த மற்றொரு தெருவில் 12 பேருக்கு கொரோனோ இருப்பது உறுதி செய்யப்பட்டது. ஆனால் அவர்களும் சிகிச்சைக்கு வர மறுத்தனர். இதனால் மாநகராட்சி சுகாதார அலுவலர்கள் மற்றும் போலீசார் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தனர்.
அதேநேரத்தில் கொரோனா பாதித்த 4 பேர் தங்களது வீடுகளிலில் இருந்து வெளியே தப்பி ஓடிச்சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் பெரமனூர் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது.
புகார் மனு
இந்நிலையில், பெரமனூர் ஊர் பொதுமக்கள் சார்பில் அஸ்தம்பட்டி மண்டல ஆணையாளரிடம் ஒரு புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
பெரமனூர் கோவிந்த கவுண்டர் தோட்டம் பகுதியில் சுமார் 800 குடும்பங்களை சேர்ந்த சுமார் 3 ஆயிரம் பேர் வசிக்கிறோம். எங்கள் பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த சிலருக்கு நோய் தொற்று இருப்பது தெரியவந்து உள்ளது. ஆனால் அவர்கள் சிகிச்சைக்கு செல்லாமல் காய்கறி, பழங்கள், மளிகை பொருட்கள் வாங்குவதற்காக தெருவில் சகஜமாக நடமாடுகிறார்கள்.
இதனால் மற்றவர்களுக்கும் நோய்த்தொற்று ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது. இந்த பகுதியில் இருதய நோயாளிகள், கர்ப்பிணிகள், முதியவர்கள் அதிகமாக உள்ளனர். எனவே பரிசோதனையில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களை சிகிச்சைக்காக அழைத்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் அவர்கள் கூறியுள்ளனர்.