சென்னையில் இருந்து சேலத்துக்கு 16 ஆயிரத்து 500 கொரோனா தடுப்பூசிகள் வந்தன
சென்னையில் இருந்து சேலத்துக்கு 16 ஆயிரத்து 500 கொரோனா தடுப்பூசிகள் வந்தன.
சேலம்:
சென்னையில் இருந்து சேலத்துக்கு 16 ஆயிரத்து 500 கொரோனா தடுப்பூசிகள் வந்தன.
கொரோனா தடுப்பூசி
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரிப்பதை தொடர்ந்து முழு ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளன. கொரோனா நோய் தாக்குதலை கட்டுப்படுத்த பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன்படி, சேலம் மாவட்டத்தில் அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில் கடந்த சில நாட்களாக கொரோனா தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால் குறைவான நபர்களுக்கே தடுப்பூசிகள் போடப்பட்டு வந்தன. இந்தநிலையில் தடுப்பூசிகள் தட்டுப்பாட்டை போக்க புனேவில் இருந்து 5 லட்சம் தடுப்பூசிகள் சென்னைக்கு கொண்டு வரப்பட்டன.
16,500 தடுப்பூசிகள்
இதில் சேலம் சுகாதார மாவட்டத்துக்கு 9 ஆயிரம் கோவிஷீல்டும், 1,500 கோவேக்சினும், ஆத்தூர் சுகாதார மாவட்டத்துக்கு 5 ஆயிரம் கோவிஷீல்டும், ஆயிரம் கோவேக்சினும் என மொத்தம் 16 ஆயிரத்து 500 கொரோனா தடுப்பூசி மருந்துகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
இந்த தடுப்பூசிகள் சென்னையில் இருந்து நேற்று சேலத்துக்கு வாகனம் மூலம் கொண்டு வரப்பட்டன. இதையடுத்து ஆத்தூர் சுகாதார மாவட்டத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்பட்டன. இந்த தடுப்பூசிகள் அனைத்து வயதுடையவர்களுக்கு பிரித்து செலுத்தப்படும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.