நிலக்கோட்டை பூ மார்க்கெட்டை திறக்க அனுமதி
நிலக்கோட்டை பூ மார்க்கெட்டை பல்வேறு நிபந்தனைகளுடன் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது.
நிலக்கோட்டை:
கொரோனா தடுப்பு ஊரடங்கு எதிரொலியாக, கடந்த 10 நாட்களாக நிலக்கோட்டை பூ மார்க்கெட் மூடப்பட்டுள்ளது.
இதனால் பூக்கள் சாகுபடி செய்த விவசாயிகள் மற்றும் வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் நிலக்கோட்டை பூ மார்க்கெட்டை திறப்பது குறித்து வியாபாரிகள், விவசாயிகளுடனான ஆலோசனை கூட்டம், பேரூராட்சி செயல் அலுவலர் பூங்கொடி முருகு தலைமையில் நடந்தது.
இந்த கூட்டத்துக்கு நிலக்கோட்டை தாசில்தார் சுப்பையா, போலீஸ் துணை சூப்பிரண்டு முருகன், இன்ஸ்பெக்டர் பவுல் தேவதாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் பல்வேறு நிபந்தனைகளுடன் பூ மார்க்கெட்டை இன்று (வியாழக்கிழமை) முதல் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது.
சமூக இடைவெளியோடு கடைகள் செயல்பட வழிவகை செய்ய வேண்டும். மார்க்கெட்டுக்கு வருகிற வாகனங்கள் குறித்த பட்டியலை போலீசாரிடம் அளிக்க வேண்டும்.
முடிந்தவரையில் ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு விவசாயி, பூக்களை சேகரித்து மார்க்கெட்டுக்கு கொண்டு வர வேண்டும். பூக்கடை உரிமையாளர்கள், பரிசோதனை செய்து கொரோனா இல்லை என்ற சான்றை பேரூராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
இந்த கூட்டத்தில் சுகாதார ஆய்வாளர் செந்தில்குமார், வருவாய் ஆய்வாளர் சென்னாகிருஷ்ணன், கிராம நிர்வாக அலுவலர்கள் கணேசன், ராமமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.