அக்னி நட்சத்திரம் முடிந்தும் தஞ்சை மாவட்டத்தில் 100 டிகிரியை தாண்டி சுட்டெரிக்கும் வெயில் சமாளிக்க முடியாமல் பொதுமக்கள் கடும் அவதி
அக்னி நட்சத்திரம் முடிந்தும் தஞ்சை மாவட்டத்தில் வெயில் 100 டிகிரியை தாண்டி சுட்டெரித்து வருகிறது. கொளுத்தும் வெயிலை சமாளிக்க முடியாமல் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
தஞ்சாவூர்:-
அக்னி நட்சத்திரம் முடிந்தும் தஞ்சை மாவட்டத்தில் வெயில் 100 டிகிரியை தாண்டி சுட்டெரித்து வருகிறது. கொளுத்தும் வெயிலை சமாளிக்க முடியாமல் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
வெயில் தாக்கம்
தமிழகத்தில் இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் பருவம் தவறி மழை பெய்தது. அதன் பின்னர் அவ்வப்போது வெயில் கொளுத்தியது. அக்னி நட்சத்திரம் தொடக்க நாளான கடந்த மாதம் 4-ந் தேதி தஞ்சை மாவட்டத்தில் 104 டிகிரி வெயில் கொளுத்தியது. அதன் பின்னர் இடையிடையே ஒரு சில நாட்கள் மழை பெய்தது. இருப்பினும் 100 டிகிரிக்கு குறையாமல் வெயில் கொளுத்தி வந்தது.
இந்த நிலையில் கோடை வெயிலின் உச்சகட்டமான கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் கடந்த மாதம் 29-ந் தேதியுடன் நிறைவடைந்தது.
106 டிகிரி வெயில்
அக்னி நட்சத்திரம் நிறைவடைந்த பின்னரும் வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே உள்ளது. கடந்த இரண்டு நாட்களாக தஞ்சை மாவட்டத்தில் 103 மற்றும் 105 டிகிரி வரை வெயில் கொளுத்தியது.
நேற்று காலை முதலே வழக்கத்தைவிட வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. பகலில்தான் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது என்றால் இரவிலும் மின்விசிறியில் இருந்து வரும் அனல் காற்றால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். நேற்று தஞ்சை மாவட்டத்தில் 105.8 டிகிரி வெயில் கொளுத்தியது.
சமாளிக்க முடியாமல் அவதி
தற்போது கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். இந்த நிலையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் வெயிலை சமாளிக்க முடியாமல் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
வெயிலின் தாக்கத்தில் இருந்து மக்கள் தங்களை காத்துக்கொள்ள தள்ளுவண்டி மற்றும் வாகனங்களில் வரும் பழங்களை அதிக அளவில் வாங்கி சாப்பிட்டு வருகிறார்கள்.
மின் தடையால் மக்கள் அவதி
தஞ்சை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக அவ்வப்போது மின்தடை ஏற்பட்டு வருகிறது. அதுவும் குறிப்பாக கிராமப்புற பகுதிகளில் இரவு நேரங்களில் மின்தடை ஏற்படுகிறது.
இதேபோல் திருவாரூர், நாகை மாவட்டத்திலும் அக்னி நட்சத்திரம் முடிந்த பின்னரும் வெயில் கொளுத்தி வருகிறது. திருவாரூர் மாவட்டத்தில் நேற்று 103 டிகிரி வெயில் கொளுத்தியது. நாகை மாவட்டத்தில் 102 டிகிரி வெயில் கொளுத்தியது குறிப்பிடத்தக்கது.