கொரோனாவுக்கு ஒரே குடும்பத்தில் 3 பேர் பலி வருமானம் இன்றி தவிக்கும் பெண், மகனுடன் வந்து வேலை கேட்டு கலெக்டரிடம் மனு
கொரோனாவுக்கு ஒரே குடும்பத்தில் 3 பேர் இறந்ததால் வருமானமின்றி தவிக்கும் பெண், மகனுடன் வந்து தனக்கு வேலை கேட்டு கலெக்டரிடம் மனு அளித்தார்.
தஞ்சாவூர்:-
கொரோனாவுக்கு ஒரே குடும்பத்தில் 3 பேர் இறந்ததால் வருமானமின்றி தவிக்கும் பெண், மகனுடன் வந்து தனக்கு வேலை கேட்டு கலெக்டரிடம் மனு அளித்தார்.
கொரோனாவுக்கு ஒரே குடும்பத்தில் 3 பேர் பலி
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் ஸ்ரீ நகரை சேர்ந்தவர் இமானுவேல் விமல் ராஜ்(வயது 44). இவருடைய மனைவி எஸ்தர் ருஷ்யா(40). இவர்களுக்கு ஜாஷ்வா, ஜோய் ஆபிரகாம் என்ற 2 மகன்கள் உள்ளனர். கடந்த மாதம் 14-ந் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இமானுவேல் விமல்ராஜ் உயிரிழந்தார். மேலும் இமானுவேல் விமல்ராஜின் தந்தை ஜெயராஜ் (77), தாயார் கிளாரா (75) ஆகியோரும் கடந்த 17-ந் தேதி உயிரிழந்தனர்.
இதையடுத்து எஸ்தர் ருஷ்யா மற்றும் அவருடைய மகன்கள் உள்ளிட்ட 5 பேர் தனிமைப்படுத்தப்பட்டு வீடு திரும்பினார். ஜெயராஜும், கிளாராவும் தலைமை ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் ஆவர். இந்த நிலையில் ஒரே குடும்பத்தில் வருமானம் ஈட்டி வந்த 3 பேர் உயிர் இழந்ததால் எஸ்தர் ருஷ்யாவால் வருமானமின்றி குடும்பம் நடத்துவதற்கு மிகவும் சிரமப்பட்டு வருகிறார். அவர் ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார்.
வேலை இழப்பு
கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளிகள் மூடப்பட்டதால் எஸ்தர் ருஷ்யா வேலை இல்லாமல் தவித்து வருகிறார். இதனால் வருமானத்திற்கு வழி தெரியாமல் திகைத்து வந்த எஸ்தர் ருஷ்யா நேற்று தனது மகனுடன் தஞ்சை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். கலெக்டர் கோவிந்தராவிடம் அவர் ஒரு மனு கொடுத்தார் அதில் அவர் கூறியிருப்பதாவது:-
எங்களது குடும்பத்தில் வருமானம் ஈட்டி வந்த 3 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிர் இழந்ததால் நான் வருமானம் இன்றி தவித்து வருகிேறன். வருமானத்திற்கும் வேறு வழியில்லை. இதனால் எனது மகன்களை நான் எவ்வாறு படிக்க வைக்க போகிறேன்? என்று தெரியவில்லை.
வேலை வழங்க வேண்டும்
எனவே இந்த பாதிப்பில் இருந்து மீண்டு வரும் வகையில் எனக்கு ஏதாவது வேலை வழங்கி எனது குடும்பத்தை காப்பாற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் படித்து வரும் எனது மகன்களுக்கு அரசு சலுகைகள் கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.