திருச்சி ஆழ்வார்தோப்பில் துணிகரம் வீட்டின் ஜன்னல் கம்பியை அறுத்து ரூ.10 லட்சம் கொள்ளை; ஆட்கள் இல்லாததை நோட்டமிட்டு மர்ம நபர்கள் கைவரிசை

திருச்சி ஆழ்வார்தோப்பில் வீட்டின் ஜன்னல் கம்பியை உடைத்து ரூ.10 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது. வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்டு மர்மநபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.

Update: 2021-06-02 20:23 GMT
திருச்சி,
திருச்சி ஆழ்வார்தோப்பில் வீட்டின் ஜன்னல் கம்பியை உடைத்து ரூ.10 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது. வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்டு மர்மநபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.

வெளிநாட்டில் வேலை

திருச்சி ஆழ்வார்தோப்பு காஜாதோப்பு பகுதியை சேர்ந்தவர் அப்துல்மாலிக். இவருடைய மனைவி நஜீமா (வயது 75). அப்துல்மாலிக் பல ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவர்களுக்கு 3 மகன்களும், 1 மகளும் உள்ளனர். மகன்கள் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்கள். 

இவருடைய மகள் உறையூர் ராமலிங்கநகரில் வசித்து வருகிறார். கடந்த 25-ந் தேதி நஜீமா வீட்டைப் பூட்டிவிட்டு மகள் வீட்டுக்கு சென்று இருந்தார். நேற்று முன்தினம் நள்ளிரவு இவருடைய வீட்டின் பக்கவாட்டு சிறிய சந்து பகுதியில் உள்ள ஜன்னல் கம்பியை மர்மநபர்கள் அறுத்து வீட்டினுள் புகுந்துள்ளனர்.

ரூ.10 லட்சம் கொள்ளை

அங்கு பீரோவில் பேக்கில் வைத்திருந்த ரூ.10 லட்சத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். மேலும், போலீசாரிடம் சிக்கிக் கொள்ளாமல் இருக்க கொள்ளையர்கள் வீட்டினுள் மிளகாய் பொடியை தூவி விட்டு சென்றுள்ளனர். 

நேற்று பகல் 3 மணி அளவில் நஜீமாவின் உறவினரான சலீம், அவரது வீட்டின் அருகே உள்ள சந்து வழியாக சென்றுள்ளார். அப்போது வீட்டின் பக்கவாட்டு ஜன்னல் கம்பி அறுக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். 

உடனடியாக செல்போன் மூலம் நஜீமாவுக்கு தகவல் தெரிவித்தார். அவர் விரைந்து வந்து பார்த்தார். அங்கு பீரோ லாக்கரில் இருந்த நகைகள் அப்படியே இருந்தன. ரூ.10 லட்சம் மட்டும் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. 

உடனே இது குறித்து தில்லைநகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்கள். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. விரல்ரேகை நிபுணர்களும் அங்கு வந்து தடயங்களை சேகரித்தனர்.

கண்காணிப்பு கேமரா ஆய்வு

நஜீமா தனது வீட்டில் ஒத்திக்கு வசித்து வந்தவர்களுக்கு கொடுப்பதற்காகவும், மேலும் சிலர் கொடுத்த வாடகை பணத்தையும் சேர்த்து ரூ.10 லட்சம் மற்றும் வெளிநாட்டு பணத்தையும் வீட்டில் வைத்து இருந்துள்ளார். அவரது வீட்டில் பணம் இருப்பதை தெரிந்த நபர்களே இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். 

தொடர்ந்து அந்தப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். எப்போதும் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள ஆழ்வார்தோப்பு பகுதியில் நடந்துள்ள இந்த கொள்ளை சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்