நெல்லையில் துணை போலீஸ் சூப்பிரண்டு கொரோனா தொற்றால் மரணம்

நெல்லையில் துணை போலீஸ் சூப்பிரண்டு கொரோனா தொற்றால் மரணம் அடைந்தார்.

Update: 2021-06-02 19:22 GMT
புளியங்குடி:
தென்காசி மாவட்டம் புளியங்குடியில் துணை போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வந்தவர் சாமிநாதன் (வயது 48). இவர் கடந்த 14-ந் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார்.

இதையடுத்து அவரை நெல்லை சந்திப்பில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று காலையில் சாமிநாதன் பரிதாபமாக இறந்தார்.

கொரோனாவுக்கு இறந்த துணை போலீஸ் சூப்பிரண்டு சாமிநாதனுக்கு யமுனா என்ற மனைவியும், 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். சாமிநாதனின் சொந்த ஊர் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் ஆகும்.
இவர் நெல்லை மாவட்ட எஸ்.பி.சி.ஐ.டி. தனிப்பிரிவு இன்ஸ்பெக்டராக பணியாற்றி கடந்த செப்டம்பர் மாதம் துணை போலீஸ் சூப்பிரண்டாக பதவி உயர்வு பெற்று புளியங்குடியில் பணியாற்றி வந்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு லஞ்ச ஒழிப்புத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டாக சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டு இருந்த நிலையில் சாமிநாதன் கொரோனாவுக்கு இறந்துள்ளார். ெநல்லையில் கொரோனாவுக்கு துணை போலீஸ் சூப்பிரண்டு இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்