ரேஷன் கடைகளில் 14 வகையான மளிகை பொருட்கள் வாங்க வீடுகள் தோறும் டோக்கன் வினியோகம்
ரேஷன் கடைகளில் 14 வகையான மளிகை பொருட்கள் வாங்க வீடுகள் தோறும் டோக்கன் வினியோகம் செய்யும் பணி மாவட்டம் முழுவதும் தொடங்கியது.
கரூர்
ரேஷன் கடைகளை திறக்க அனுமதி
கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் தற்போது தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்களின் நலன்கருதி ரேஷன் கடைகள் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை இயங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
இந்தநிலையில் நிவாரண உதவியாக 14 மளிகை பொருட்கள் அடங்கிய இலவச தொகுப்பு அந்தந்த ரேஷன் கடைகள் மூலம் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
டோக்கன் வினிேயாகம்
கொரோனா காலகட்டமாக இருப்பதால் பொதுமக்கள் அதிகளவு கூட்டம் கூடுவதை தவிர்க்கும் பொருட்டு குறிப்பிட்ட நாளில், நேரத்தில் மளிகை பொருட்கள் பெறும் வகையில் வீடுகள் தோறும் டோக்கன் வினியோகம் செய்யப்பட்டு அதன்படி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி கரூர் மாவட்டத்தில் 585 ரேஷன் கடைகளில் இந்த மாதத்திற்கான அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வாங்குவதற்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு டோக்கன் வினியோகம் செய்யும் பணி நேற்று முதல் தொடங்கப்பட்டது. ரேஷன் கடை ஊழியர்கள் வீடு, வீடாக சென்று டோக்கன் வினியோகம் செய்து வருகின்றனர்.
அந்த டோக்கனில் ரேஷன் கடையின் பெயர், அட்டைதாரர் பெயர், கிராமம், தெரு, பொருட்கள் வழங்கும் தேதி, நேரம் ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளது.
நாளைமறுநாள் முதல்...
டோக்கனின் குறிப்பிடப்பட்டுள்ள தேதி, நேரத்தில் குடும்ப அட்டைதாரர்கள் முககவசம் அணிந்து ரேஷன் கடைக்கு சென்று, சமூக இடைவெளியை கடைபிடித்து மளிகை பொருட்களை வாங்கி செல்லுமாறு அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். கரூர் மாவட்டத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு நாளை (வெள்ளிக்கிழமை) வரை டோக்கன் வினியோகம் செய்யப்படும். நாளை மறுநாள் (சனிக்கிழமை) முதல் ரேஷன் கடையில் பொருட்கள் வினியோகம் செய்யப்படும் என்று ரேஷன் கடை ஊழியர்கள் தெரிவித்தனர்.