புவனகிரி அருகே பரபரப்பு கோவிலில் அம்மன் நகைகள் கொள்ளை உண்டியலையும் மர்ம மனிதர்கள் தூக்கி சென்றனர்
புவனகிரி அருகே கோவிலில் அம்மன் நகைகள் மற்றும் உண்டியலை மர்ம மனிதர்கள் கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.
புவனகிரி,
புவனகிரி அருகே உள்ள அம்பாள்புரம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற செல்லியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் கதவு நேற்று திறந்து கிடந்தது. இதை பார்த்த அந்த பகுதி மக்கள் உள்ளே சென்று பார்த்தனர்.
அப்போது, அங்கிருந்த உண்டியலை காணவில்லை. மேலும் அம்மன் கழுத்தில் இருந்த நகை, மூக்குத்தி, தங்க பொட்டு ஆகியனவும் கொள்ளை போயிருந்தது.
இதுகுறித்து அவர்கள் மருதூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டனர். அப்போது கோவிலில் கொள்ளையடிக்கப்பட்ட உண்டியல், சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் வயல்வெளியில் உடைக்கப்பட்டு கிடந்தது தெரியவந்தது.
வலைவீச்சு
கோவிலில் 1 பவுன் நகைகளை கொள்ளையடித்த மர்ம மனிதர்கள் உண்டியலை வயல்வெளிக்கு தூக்கி சென்று உடைத்து, அதில் இருந்த பணத்தையும் திருடி சென்று இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம மனிதர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.