தர்ப்பூசணிகள் அறுவடை செய்யாமல் வயல்களில் அழுகி கிடக்கும் அவலம்
கொள்முதல் செய்ய வியாபாரிகள் வராததால் தர்ப்பூசணிகள் அறுவடை செய்யாமல் வயல்களில் அழுகி கிடக்கும் அவலம் ஏற்பட்டு உள்ளது. எனவே அரசு நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவெண்காடு:
கொள்முதல் செய்ய வியாபாரிகள் வராததால் தர்ப்பூசணிகள் அறுவடை செய்யாமல் வயல்களில் அழுகி கிடக்கும் அவலம் ஏற்பட்டு உள்ளது. எனவே அரசு நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தர்ப்பூசணி
கோடை காலத்தில் உடல் சூட்டை தணிக்கும் பழங்களில், முதன்மையான பழமாக விளங்குவது தர்ப்பூசணி என்றால் மிகையாகாது. இந்த பழங்கள் உண்பதால், உடலில் உறுதித்தன்மை ஏற்படுவதாக மருத்துவ ஆய்வு தெரிவிக்கின்றது. குழந்தைகள், இளைஞர்கள் மிகவும் ஆர்வமாக தர்ப்பூசணி பழங்களை உட்கொள்கின்றனர்.
மார்ச் மாதம் தர்ப்பூசணி சாகுபடி செய்யப்படுகின்றது. ஒரு மாத கால அளவில் கொடி படர்ந்து காய்ப்புக்கு வந்து விடும். ஜூலை மாதம் வரை தர்ப்பூசணி காய்க்கும் காலமாக விளங்குகிறது. குறுகிய காலத்தில் தர்ப்பூசணியின் மூலம் லாபம் கிடைப்பதால், கடந்த சில ஆண்டுகளாக தர்ப்பூசணி சாகுபடியில் ஆர்வம் காட்டி வந்தனர்.
வயல்களில் அழுகும் அவலம்
சீர்காழி தாலுகா பகுதியில் திருவாலி, மங்கைமடம், மணல்மேடு, காரைமேடு, அண்ணன்கோவில், புதுதுறை மற்றும் கொள்ளிட வட்டார பகுதிகளில் தர்ப்பூசணி பரவலாக பயிரிடப்பட்டு வருகிறது. இந்த பகுதியில் விளைவிக்கப்படும் தர்ப்பூசணி பழங்கள், சுவை அதிகரித்து காணப்படுவதால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள், போட்டி போட்டு வந்து கொள்முதல் செய்வர்.
ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக ஊரடங்கு அமலில் இருப்பதால், வெளியூர் வியாபாரிகள் வருவது தடைபட்டுள்ளது. இதன் காரணமாக பல இடங்களில் தர்ப்பூசணி பழங்களை விவசாயிகள் பறிப்பதில் ஆர்வம் காட்டாமல் உள்ளனர். இதனால் வயல்களில் அறுவடை செய்யாமல் தர்ப்பூசணி பழங்கள் அழுகும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
நிவாரணம் வழங்க வேண்டும்
இதுகுறித்து தர்ப்பூசணியை பயிரிடும் விவசாயி கூறுகையில், ஒரு ஏக்கர் தர்ப்பூசணி பழம் சாகுபடி செய்ய ரூ.50 ஆயிரத்திற்கு மேல் செலவாகிறது. அதிக அளவில் வெளியூர் வியாபாரிகளை நம்பியே சாகுபடி செய்து வருகிறோம். ஆனால் இந்த ஆண்டு ஊரடங்கு அமலில் இருப்பதால் வியாபாரிகள் வரவில்லை.
எனவே தர்ப்பூசணி பழங்களை அறுவடை ஆர்வம் காட்டுவதில்லை, கடந்த இரண்டு ஆண்டுகளாக தர்ப்பூசணி பழ சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், அதிக அளவில் நஷ்டம் அடைந்துள்ளனர். எனவே தமிழக அரசு கணக்கெடுப்பு நடத்தி உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றார்.