காரைக்குடியில் ரெயில் பயணிகளிடம் போலீசார் தீவிர சோதனை

வெளிமாநிலத்தில் இருந்து மதுபாட்டில்களை கடத்தி வருகிறார்களா? என காரைக்குடியில் ரெயில் பயணிகளிடம் போலீசார் தீவிர சோதனை நடத்தினர்.

Update: 2021-06-02 17:07 GMT
காரைக்குடி,

வெளிமாநிலத்தில் இருந்து மதுபாட்டில்களை கடத்தி வருகிறார்களா? என காரைக்குடியில் ரெயில் பயணிகளிடம் போலீசார் தீவிர சோதனை நடத்தினர்.

முழு ஊரடங்கு

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக 7-ந்தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையொட்டி மதுக்கடைகள் அடைக்கப்பட்டு இருப்பதால் மதுப்பிரியர்கள் மதுபாட்டில்கள் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். தற்போது பஸ் போக்குவரத்து இயங்காத நிலையில் ரெயில்கள் மட்டும் இயங்கி வருகிறது.

மதுபாட்டில்கள் கடத்தல்

 இந்த நிலையில் வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வரும் ரெயில்களில் அந்த மாநிலத்தில் இருந்து விற்பனைக்காக மதுபாட்டில்கள் கடத்தி வரும் சம்பவம் நடந்து வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து திண்டுக்கல் வழியாக தூத்துக்குடிக்கு இயக்கப்பட்ட எக்ஸ்பிரஸ் ரெயிலில் மதுபாட்டில் கடத்தி வருவதாக ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
போலீசார் நடத்திய சோதனையில் ரூ.80 ஆயிரம் மதிப்பிலான மதுபாட்டில்கள் கடத்தி வரப்பட்டது கண்டறியப்பட்டது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து அனைத்து ரெயில் நிலையங்களிலும் பயணிகளிடம் சோதனை நடத்த உத்தரவிடப்பட்டது.

ரெயில்களில் சோதனை

காரைக்குடி ரெயில்வே நிலையம் வழியாக தினந்தோறும் சென்னை-ராமேசுவரம், சென்னை-காரைக்குடி, சென்னை-செங்கோட்டை ஆகிய விரைவு ரெயில்களும், திருச்சி-ராமேசுவரம், கோவை-ராமேசுவரம், காரைக்குடி-திருச்சி ஆகிய பயணிகள் ரெயில்களும், ராமேசுவரம்-வாரணாசி, ராமேசுவரம்-புவனேஸ்வர் ஆகிய வாராந்திர ரெயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன.
 காரைக்குடி ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனாட்சி மேற்பார்வையில், சப்-இன்ஸ்பெக்டர் ராஜராஜன் தலைமையில் 7 பேர் கொண்ட போலீசார் காரைக்குடிக்கு ரெயில்களில் வரும் பயணிகளின் உடைமைகள் மற்றும் ரெயில்களின் பெட்டிகளில் மதுபாட்டில்கள் மறைத்து வைக்கப்பட்டு இருக்கிறதா? என தீவிரமாக சோதனை நடத்தினர்.

மேலும் செய்திகள்