விவசாயி போல வேடமணிந்து விழிப்புணர்வூட்டிய இன்ஸ்பெக்டர்
நாகையில் கொரோனா தொற்றுக்கு எதிராக போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் விவசாயி போல வேடமணிந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதை ஏராளமான மக்கள் கண்டு களித்தனர்.
நாகப்பட்டினம்;
நாகையில் கொரோனா தொற்றுக்கு எதிராக போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் விவசாயி போல வேடமணிந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதை ஏராளமான மக்கள் கண்டு களித்தனர்.
கொரோனா விழிப்புணர்வு
கொரோனா தொற்றை கட்டுப்படுத்த நாகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. இந்நிலையில் நாகை டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியசாமி கிராமங்களில் கொரோனா வைரஸ் தொற்று குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்தார்.
இதன்படி நாகை கீரைக்கொல்லை தெரு பகுதியில் இன்ஸ்பெக்டர் பெரியசாமி விவசாயி போல் வேடம் அணிந்து கையில் மண்வெட்டியை எடுத்து நடிகர் சிவாஜி நடித்த கவுரவம் படத்திலிருந்து பாலூட்டி வளர்த்த கிளி என்ற பாடலை கொரோனா விழிப்புணர்வு பாடலாக பாடி மாற்றி நடித்தார்.
உறுதி மொழி ஏற்பு
அப்போது விவசாய பணி மேற்கொள்ளும் போதும் பணியை முடித்துவிட்டு வரும் போதும் முககவசம் அணியாமல் இன்ஸ்பெக்டர் பெரியசாமி வந்தார். அப்போது கொரோனா வேடமணிந்த காவலர்கள் அவரை நெருங்குவது போன்றும் இதனால் கொரோனா தொற்று ஏற்பட்டு விவசாயியாக நடித்த இன்ஸ்பெக்டர் பெரியசாமி மயங்கி விழுவது போல நடித்து காட்டினார். இதை பொதுமக்கள் கண்டு களித்தனர். பின்னர் இன்ஸ்பெக்டர் மற்றும் பொதுமக்கள் கொரோனா ஒழிப்பு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.