காய்கறி, பழ வியாபாரிகளுக்கு கொரோனா தடுப்பூசி
வாகனங்களில் செல்லும் காய்கறி, பழ வியாபாரிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
விழுப்புரம்,
தமிழகத்தில் கொரோனா தொற்றை முற்றிலும் ஒழிக்கும் வகையில் கடந்த மாதம் 24-ந் தேதி முதல் தளர்வில்லாத முழு ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இருப்பினும் பொதுமக்கள் நலன் கருதி வாகனங்கள் மூலம் காய்கறி, பழ வகைகளை வீடு தேடிச்சென்று விற்பனை செய்வதற்கு அரசு நடவடிக்கை எடுத்தது. அதன்படி தமிழகம் முழுவதும் வாகனங்கள் மூலமாக காய்கறிகள், பழ வகைகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள நகர்புற மற்றும் ஊரக பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு காய்கறிகள், பழ வகைகளை வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை மற்றும் வேளாண் விற்பனைத்துறை மூலம் 600-க்கும் மேற்பட்ட வாகனங்கள் மூலமாக வியாபாரிகள் வீதி, வீதியாக கொண்டு சென்று பொதுமக்களின் வீட்டு வாசலிலேயே விற்பனை செய்து வருகின்றனர்.
கொரோனா தொற்றை தடுக்க
விழுப்புரம் நகராட்சி மற்றும் காணை, கோலியனூர், கண்டமங்கலம், விக்கிரவாண்டி ஆகிய ஒன்றியங்களை சேர்ந்த வியாபாரிகள், காய்கறிகள், பழ வகைகளை வாங்குவதற்காக தினந்தோறும் விழுப்புரம் ஜானகிபுரம் புறவழிச்சாலை அருகில் உள்ள மொத்த அங்காடிக்கு அதிகாலை 5 மணியளவில் வருகின்றனர். அங்கு காய்கறிகள், பழ வகைகளை மொத்தமாக வாங்கிக்கொண்டு தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளுக்கு வாகனங்களில் சென்று பொதுமக்களுக்கு விற்பனை செய்து வருகின்றனர்.
இவ்வாறு வாகனங்கள் மூலம் காய்கறிகள், பழ வகைகளை விற்பனை செய்து வரும் வியாபாரிகளுக்கு கொரோனா தொற்று ஏற்படாமல் இருக்கவும், அவர்களிடம் காய்கறிகள், பழங்களை வாங்கும் பொதுமக்களுக்கும் கொரோனா தொற்று பரவாமல் இருக்கும் வகையிலும் மாவட்ட நிர்வாகத்தின் அறிவுரைப்படி நகராட்சி நிர்வாகம், வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை ஆகியவை இணைந்து காய்கறி, பழ வியாபாரிகளுக்கு கொரோனா தடுப்பூசி முகாமை ஏற்பாடு செய்தது.
வியாபாரிகளுக்கு தடுப்பூசி
அதன் அடிப்படையில் நேற்று காலை விழுப்புரம் ஜானகிபுரம் பகுதியில் உள்ள மொத்த காய்கறி அங்காடி வளாகத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முகாமில் விழுப்புரம் நகராட்சி நகர்புற ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் ஜோதி தலைமையிலான மருத்துவ குழுவினர் கலந்துகொண்டு காய்கறி, பழ வியாபாரிகளுக்கு கொரோனா தடுப்பூசியை செலுத்தினர்.
இதில் காய்கறி, பழ வியாபாரிகள் 100-க்கும் மேற்பட்டோர் கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டனர். பின்னர் அவர்கள் காய்கறிகள், பழங்களை வாகனங்களில் ஏற்றிக்கொண்டு விற்பனைக்காக சென்றனர். இம்முகாமை நகராட்சி ஆணையர் தட்சிணாமூர்த்தி, நகர்நல அலுவலர் டாக்டர் பாலசுப்பிரமணியன், சுகாதார ஆய்வாளர் ரமணன் ஆகியோர் பார்வையிட்டனர்.