சூதாடியவர்களை போலீசார் பிடிக்க விரட்டி சென்ற போது கிணற்றில் தவறி விழுந்து வாலிபர் சாவு

பெலகாவி அருகே சூதாடியவர்களை போலீசார் பிடிக்க முயன்ற போது, தப்பி ஓடிய வாலிபர் கிணற்றில் தவறி விழுந்து பலியான பரிதாபம் நடந்துள்ளது.

Update: 2021-06-02 16:02 GMT
பெலகாவி, 

கர்நாடகத்தில் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கின் போது தேவையில்லாமல் வெளியே சுற்றி திரிபவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இந்த நிலையில், பெலகாவி மாவட்டம் அலாரவாடி கிராமத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி ஏராளமான வாலிபர்கள், பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டு இருப்பதாக பெலகாவி புறநகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே அந்த கிராமத்திற்கு போலீசார் விரைந்து சென்றனர்.

போலீசார் வருவதை பார்த்ததும் சூதாட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருந்த வாலிபர்கள், நாலாபுறமும் சிதறி ஓடினார்கள். அவர்களை பிடிக்க போலீசார் விரட்டி சென்றார்கள். அந்த சந்தர்ப்பத்தில் கிராமத்தில் இருந்து சிறிது தூரத்தில் உள்ள தோட்டத்து கிணற்றில் ஒரு வாலிபர் தவறி விழுந்தார். இதில், அவரது தலையில் பலத்தகாயம் ஏற்பட்டது.

பின்னர் கிணற்றுக்குள் இருந்து வாலிபரை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் போலீசார் அனுமதித்தனர். அங்கு்அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பரிதாபமாக இறந்து விட்டார். அந்த வாலிபர் அதே கிராமத்தை சேர்ந்த கங்கிராலய்யா மனோகா் பரத் (வயது 27) என்று தெரிந்தது. போலீசாரிடம் சிக்கி கொள்ளாமல் இருப்பதற்காக தப்பி ஓடிய போது, கிணறு இருப்பதை கவனிக்காமல் ஓடியதால், கால் தவறி உள்ளே விழுந்து அவர் உயிர் இழந்தது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து பெலகாவி புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சூதாட்டத்தில் ஈடுபட்ட 5 வாலிபர்களை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்