வேலூர் மாவட்டத்துக்கு 7 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசி வந்தது
வேலூர் மாவட்டத்திற்கு 7 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகள் வந்தது.
வேலூர்
தட்டுப்பாடு
வேலூர் மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் சிறப்பு முகாம்கள் மூலம் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு தடுப்பூசி மருந்துகள் தீர்ந்து போனது.
இதனால் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடைபெற்று வந்த பெரும்பாலான சிறப்பு முகாம்கள் நிறுத்தப்பட்டன. கையிருப்பில் உள்ள மருந்துகள் 45 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு மட்டும் செலுத்தப்பட்டு வருகிறது. 45 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது நிறுத்தப்பட்டது.
பொதுமக்கள் பலர் தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆர்வம் காட்டியபோதிலும் முகாம் நடைபெறாததால் அவர்கள் ஆஸ்பத்திரிகளை தேடி அலைந்தனர். எனவே வேலூர் மாவட்ட பயன்பாட்டுக்காக கூடுதல் தடுப்பூசி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
7 ஆயிரம் தடுப்பூசிகள்
அதன்படி வேலூர் மாவட்டத்திற்கு நேற்று காலையில் 7 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகள் வந்தன. இந்த தடுப்பூசி மருந்துகள் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே போடுவதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அரசு ஆஸ்பத்திரி மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் சென்று முதல் டோஸ் மற்றும் 2-வது டோஸ் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். கூடுதலாக தடுப்பூசி மருந்துகள் வந்தவுடன் 45 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும். கோவேக்சின் தடுப்பூசி மருந்துகள் 2-வது டோஸ் மட்டுமே செலுத்தப்பட்டு வருகிறது.
இந்த தகவலை சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.