காக்களூர் சிட்கோ தொழிற்பேட்டையில் சாலையில் ஆறாக ஓடும் கழிவுநீரால் தொற்றுநோய் ஏற்படும் அபாயம் - நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
காக்களூர் சிட்கோ தொழிற்பேட்டையில் சாலையில் ஆறாக ஓடும் கழிவுநீரால் தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவள்ளூர்,
திருவள்ளூரை அடுத்த காக்களூர் சிட்கோ தொழிற்பேட்டையில் 200-க்கும் மேற்பட்ட தனியார் தொழில் நிறுவனங்களும் குடியிருப்புகளும் உள்ளது. இந்த நிலையில் இந்த தனியார் தொழில் நிறுவனங்களில் இருந்து வெளியேறும் கழிவுநீர் அனைத்தும் அருகில் உள்ள கால்வாயில் விடப்படுகிறது.
அந்த கால்வாயில் இருந்து வரும் தண்ணீர் அருகில் உள்ள தண்ணீர்குளம் கிராம ஏரியில் விடப்பட்டு வந்தது. இந்த கழிவுநீர் ஏரியில் விடப்படுவதால் தண்ணீர் மாசடைவதாக கூறி அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் புகார் அளித்ததைத் தொடர்ந்து தொழிற்பேட்டையில் இருந்து வெளியேறும் கழிவுநீர் ஏரியில் கலக்காதவாறு தடுப்புகளை அமைத்தனர்.
இதன் காரணமாக சிட்கோ தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கழிவுநீர் வெளியேற கால்வாய் வசதி இல்லாததால் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருவள்ளூர் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்தது. அந்த கால்வாயில் இருந்து தண்ணீர் வெளியேற முறையான கால்வாய் வசதி இல்லாததால் சாலைகளில் கழிவுநீரானது மழைநீருடன் கலந்து குளம்போல் தேங்கி உள்ளது.
இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. காக்களூர் சிட்கோ தொழிற்பேட்டையில் ஒவ்வொரு சாலைகளிலும் இதேபோன்று கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பொதுமக்களுக்கு தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. இதனை அங்கு உள்ள தொழிற்சாலை நிர்வாகத்தினரும் கண்டும் காணாதது போல் உள்ளனர். எனவே இதற்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் காக்களூர் சிட்கோ பகுதியில் சாலையில் தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.