கல்வராயன் மலைப்பகுதியில் சாராயம் காய்ச்சிய 23 பேர் கைது
கல்வராயன்மலை பகுதியில் போலீசார் நடத்திய சோதனையில் சாராயம் காய்ச்சிய 23 பேரை போலீசார் கைது செய்தனர்.
சேலம்:
கல்வராயன்மலை பகுதியில் போலீசார் நடத்திய சோதனையில் சாராயம் காய்ச்சிய 23 பேரை போலீசார் கைது செய்தனர்.
கல்வராயன் மலைப்பகுதி
தலைவாசல், கருமந்துறை, வாழப்பாடி, ஆத்தூர் ஆகிய பகுதிகளை சுற்றியுள்ள கல்வராயன் மலைப்பகுதியில் சாராயம் காய்ச்சுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா கனிக்கருக்கு புகார் வந்தது. இதையடுத்து மதுவிலக்கு பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜேந்திரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் கல்வராயன் மலைப்பகுதியில் தீவிர சோதனை நடத்தினர். அப்போது முட்டல் வனப்பகுதியில் பலர் சாராயம் காய்ச்சி கொண்டிருப்பதை கண்டு பிடித்தனர். இதையடுத்து சட்டத்திற்கு புறம்பாக சாராயம் காய்ச்சிய 23 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 515 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்து அழித்தனர்.
கடும் நடவடிக்கை
இதே போல அங்கு சாராயம் காய்ச்ச போடப்பட்டிருந்த 600 லிட்டர் சாராய ஊறலையும் போலீசார் அழித்தனர். இது குறித்து போலீசார் கூறும்போது, சாராயம் காய்ச்சி விற்பனை செய்வதை தடுக்க மலைப்பகுதிகளில் தொடர்ந்து சோதனை நடத்தப்படும்.
மேலும் சாராயம் காய்ச்சிபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர்.