கொரோனாவுக்கு 5 பேர் பலி
பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் மேலும் 227 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
பெரம்பலூர்:
227 பேருக்கு தொற்று
பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக ஒன்றிய- கிராமப்புறங்களில் கொரோனா தொற்று பாதிப்புகள் குறையாமல் அதிகரித்தவாறு உள்ளது. மாவட்டத்தில் 8,665 பேர் தொற்றுக்கு உள்ளாகி இருந்தனர். இவர்களில் 5,880 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர்.
இந்நிலையில் மாவட்டத்தில் நேற்று அறிவிக்கப்பட்ட பரிசோதனை முடிவின்படி மேலும் 227 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் 2,259 பேர் தனிமைப்படுத்தும் முகாம்கள் மற்றும் வீடுகளில் தங்கி உள்ளனர். பெரம்பலூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் இவர்கள் உள்பட 139 பேரும், தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 118 பேரும் சிகிச்சையில் உள்ளனர். 468 பேர் பெரம்பலூர், அரியலூர், திருச்சி, சென்னை, காஞ்சீபுரம், மதுராந்தகம், சேலம், கள்ளக்குறிச்சி ஆகிய நகரங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
5 பேர் பலி
மேலும் கொரோனாவுக்கு உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது. ஆலத்தூர் தாலுகா கூடலூரை சேர்ந்த 52 வயது மதிக்கத்தக்க விவசாயி உள்பட 5 பேர் கொரோனா தொற்றுக்கு பலியானார்கள். இதுவரை மொத்தம் 62 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர். பெரம்பலூர் நகரம் தவிர கே.எறையூர், பாடாலூர், செட்டிகுளம், அம்மாபாளையம், குரும்பலூர், செஞ்சேரி, சிறுவாச்சூர், எசனை, லாடபுரம் ஆகிய கிராமப்பகுதிகளில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகமாக உள்ளது. கடந்த வாரத்தில் சென்னையில் இருந்து பெரம்பலூர் மாவட்டத்திற்கு வந்தவர்களால் அதிக அளவில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.