ஊரடங்கு விதிமுறைகளை மீறியதாக வாகன ஓட்டிகள் 30 பேர் மீது வழக்கு
ஊரடங்கு விதிமுறைகளை மீறியதாக வாகன ஓட்டிகள் 30 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஜெயங்கொண்டம்:
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று 2-வது அலை அதிவேகமாக பரவி வருகிறது. இதனால் தினம் தினம் உயிரிழப்பு நிகழ்ந்து வருகிறது. இந்நிலையில் அரியலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் வருவாய்த்துறை, நகராட்சி நிர்வாகம் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பல்வேறு கொரோனா தடுப்பு மற்றும் முன்னச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இருப்பினும் அத்தியாவசிய தேவையின்றி பொதுமக்கள் பலரும் வெளியே சுற்றித்திரிவதை காண முடிகிறது. இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் உத்தரவின்பேரில் ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு தேவராஜ் தலைமையில் ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர். இதில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சண்முகசுந்தரம், ஷகிராபானு, சப்-இன்ஸ்பெக்டர்கள் காதர்கான், வசந்தகுமார் உள்ளிட்ட போலீசார் 4 ரோடு, கடைவீதி, திருச்சி ரோடு, விருத்தாச்சலம் ரோடு, தா.பழூர் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் ஊரடங்கு விதிமுறைகளை மதிக்காமல் இருசக்கர வாகனங்களில் சுற்றித்திரிந்தவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் 30-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் அவர்களை எச்சரித்து போலீசார் அனுப்பி வைத்தனர்.