மணப்பாறை அரசு மருத்துவமனையில் ஆய்வு: திருச்சி மாவட்டத்திற்கு கூடுதல் தடுப்பூசி கேட்டுள்ளோம்-அமைச்சர் கே.என்.நேரு பேட்டி
திருச்சி மாவட்டத்திற்கு கூடுதல் தடுப்பூசி கேட்டுள்ளோம் என்று மணப்பாறை அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்த அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.
மணப்பாறை,
திருச்சி மாவட்டத்திற்கு கூடுதல் தடுப்பூசி கேட்டுள்ளோம் என்று மணப்பாறை அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்த அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.
அமைச்சர் ஆய்வு
மணப்பாறை அரசு மருத்துவமனையில் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் ரோட்டரி சங்கம் சார்பில் சுமார் ரூ.6 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை வழங்கினர். இதைத்தொடர்ந்து பொதுமக்களுக்கு கபசுரக்குடிநீரை அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்.
பின்னர் அமைச்சர் நிருபர்களிடம் கூறும்போது, கொரோனா தடுப்பூசி இல்லாத நிலை ஏற்பட்டாலும் கூட இன்னும் ஓரிரு தினங்களில் மீண்டும் தடுப்பூசி செலுத்தப்படும். திருச்சி மாவட்டத்திற்கு கூடுதல் தடுப்பூசி கேட்டுள்ளோம். அவை இன்னும் ஓரிரு தினங்களில் வந்ததும் மீண்டும் தடுப்பூசி செலுத்தப்படும் என்றார்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு கூறும் போது, ‘திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 6 பேருக்கு தான் கருப்பு பூஞ்சை நோய் உள்ளது. அவர்களும் சிகிச்சை பெற்று நலமோடு உள்ளனர். என்றார். ஆய்வின் போது மணப்பாறை எம்.எல்.ஏ அப்துல் சமது மற்றும் மருத்துவத்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.
மாற்றுத்திறனாளி
ஆய்வுக்கு பின்னர் அமைச்சர் அங்கிருந்து காரில் புறப்பட்டு சென்ற போது, உடையாபட்டி அருகே மாற்றுத்திறனாளி வாலிபர் ஒருவர் வெயிலில் சாலையோரத்தில் தவழ்ந்து சென்றார். இதைப்பார்த்த அமைச்சர் உடனே காரை நிறுத்தி அவரிடம் தேவையான உதவி குறித்து விசாரித்து விட்டு, தனது காரில் இருந்து பிஸ்கெட்டை கொடுத்துவிட்டு புறப்பட்டார். இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது.
கொரோனா தடுப்பு உதவி மையம் திறப்பு
திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் உருவாக்கிய நல் உள்ளங்கள் அறக்கட்டளை சார்பில் கொரோனா தடுப்பு உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தை நேற்று காலை தமிழக நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார். மேலும் வறுமையில் வாடும் 100 குடும்பங்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய பைகளை வழங்கியதோடு கொரோனா விழிப்புணர்வு பிரசார வாகனத்தையும் அவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
விழாவில் திருச்சி மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு, மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன், கல்லூரியின் செயலாளர் காஜா நஜிமுதீன், பொருளாளர் ஜமால் முகமது, உதவி செயலாளர் அப்துல் சமது, கவுரவ இயக்குனர் அப்துல் காதர்நிகால், கல்லூரி முதல்வர் இஸ்மாயில் முகைதீன் மற்றும் பேராசிரியர்கள் முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.