முன்னதாகவே போலீசார் தடுப்பூசி போட்டதால் விரைவில் குணம் அடைந்தனர்
ராமநாதபுரம் மாவட்டத்தில் அதிகமான போலீசார் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டாலும் அனைவரும் 2 தவணை தடுப்பூசிகளும் போட்டுக்கொண்டதால் விரைவில் குணமடைந்து வருகின்றனர் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டத்தில் அதிகமான போலீசார் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டாலும் அனைவரும் 2 தவணை தடுப்பூசிகளும் போட்டுக்கொண்டதால் விரைவில் குணமடைந்து வருகின்றனர் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் தெரிவித்துள்ளார்.
பரிசோதனை முகாம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. மாவட்டத்தில் அதிகமாக தொற்று பரவி வருவதை தொடர்ந்து மாவட்ட காவல் அலுவலகத்தில் போலீசாருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்று பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது.
இதில் 72 பேருக்கு நடத்தப்பட்ட சோதனையில் 37 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக மற்ற போலீசாருக்கும் நடத்தப்பட்ட சோதனையில் மேலும் 45 போலீசாருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் போலீசார் அதிகஅளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் கூறியதாவது:- மாவட்டத்தில் கடந்த ஆண்டு முதல் தற்போது வரை 325 போலீசார் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். தற்போதைய 2-வது அலையில் 145 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
தடுப்பூசி
இவர்களில் தற்போதைய நிலையில் 24 பேர் வீடுகளில் தனிமைபடுத்தப்பட்டும், 6 பேர் ஆஸ்பத்திரியிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்கள் நலமுடன் உள்ளனர். 2 பேர் மட்டும் தீவிர கண்காணிப்பில் உள்ளனர். மீதம் உள்ளவர்கள் அனைவரும் குணமடைந்து விட்டனர். மாவட்டத்தில் போலீசார் அதிகம்பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்தாலும் அனைவரும் 2 தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டதால் விரைவில் குணமடைந்துவிட்டனர்.
பாதுகாப்பு
இதன்காரணமாகவே போலீசாரின் குடும்பத்தினருக்கும் தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கொரோனா வேகமாக பரவி வருவதாலும், ஊரடங்கு சமயமாக இருப்பதாலும் பணியில் ஈடுபடும் போலீசார் தங்களை முதலில் பாதுகாப்பாக வைத்துக்கொண்டு பணியில் ஈடுபட அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். இதற்காக போலீசாருக்கு தேவையான கொரோனா தடுப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டு உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.