17 பேருக்கு கொரோனா தொற்று கிராமத்துக்கு சீல் வைப்பு
சுல்தான்பேட்டை அருகே 17 பேருக்கு கொரோனா ஏற்பட்டு உள்ளதால் அந்த கிராமத்தை அதிகாரிகள் சீல்வைத்தனர்.
சுல்தான்பேட்டை
சுல்தான்பேட்டை அருகே 17 பேருக்கு கொரோனா ஏற்பட்டு உள்ளதால் அந்த கிராமத்தை அதிகாரிகள் சீல்வைத்தனர்.
சவுடேஷ்வரி நகர்
கோவை மாவட்டத்தில் கொரோனா பரவல் தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது. தற்போது நகர்ப்புறங்களில் குறைந்து, கிராமப்புறங் களில் அதிகரித்து வருகிறது.
இதன் காரணமாக கிராமங்களுக்குள் வெளிநபர்கள் வருவதை அனுமதிப்பது இல்லை. இதற்காக பல கிராமங்களில் குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதற்கிடையே கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை அருகே உள்ள வதம்பச்சேரி ஊராட்சிக்கு உட்பட்ட சவுடேஷ்வரி நகர் என்ற கிராமத்தில் கொரோனா பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது.
தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிப்பு
இந்த முகாமில் 300 பேர் கலந்து கொண்டு பரிசோதனை செய்தனர். அதில் 17 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியானது. இதையடுத்து அந்த கிராமத்தை தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அதிகாரிகள் அறிவித்து சீல் வைத்தனர்.
அத்துடன் கிராமத்துக்கு செல்லும் பாதைகள் அனைத்தையும் தகரம் மற்றும் பலகைகளை வைத்து அடைத்தனர். வெளிநபர்கள் உள்ளே செல்வதை தடுக்கவும், உள்ளே இருந்து யாரும் வெளியே நடமாடுவதை தடுக்கவும் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.
இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
17 பேருக்கு கொரோனா
சவுடேஷ்வரி நகரில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு நடத்தப்பட்ட முகாமில் 17 பேருக்கு கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
எனவே இங்கு கொரோனா மேலும் பரவாமல் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் இங்குள்ளவர்கள் வெளியே செல்வதை தடுக்க போலீசார் கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.
அதுபோன்று அங்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
இதுபோன்று பச்சாபாளையம் ஊராட்சி பெரிய குயிலை பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேருக்கு கொரோனா இருப்பதால் அந்தப்பகுதியில் 4 தெருக்கள் அடைக்கப்பட்டு உள்ளன.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.