பறிக்காமல் கோழி கொண்டை பூக்கள் செடியில் விடப்பட்டுள்ளன
உடுமலை பகுதியில் வாங்குவதற்கு வியாபாரிகள் வராததால் பறிக்காமல் கோழி கொண்டை பூக்கள் செடியில் விடப்பட்டுள்ளன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
போடிப்பட்டி
உடுமலை பகுதியில் வாங்குவதற்கு வியாபாரிகள் வராததால் பறிக்காமல் கோழி கொண்டை பூக்கள் செடியில் விடப்பட்டுள்ளன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
வாசமில்லாத மலர்
உடுமலை அருகே பச்சை நிறப் போர்வையில் சிகப்புப் பூக்களைப் பரப்பி வைத்தது போல கண்ணைக் கவரும் விதத்தில் காட்சியளிக்கிறது கோழிக்கொண்டைப் பூக்கள் பூத்திருக்கும் விளை நிலம். பொதுவாக கோழிக்கொண்டைப் பூக்கள் சிவப்பு, மஞ்சள், ஆரஞ்சு, ரோஜா வண்ணங்களில் பூக்கும். ஆனால் சிவப்பு மற்றும் ரோஜா வண்ணப் பூக்களே அதிகமாக பயிரிடப்படுகிறது. வாசமில்லாத மலர் என்றாலும் கண்ணைக் கவரும் இதன் அழகு மற்றும் 8 நாட்கள் வரை வாடாத தன்மை ஆகியவையே மாலைகளில் இந்த பூக்களை அதிகம் பயன்படுத்துவதற்குக் காரணமாகிறது.
அதிலும் சம்பங்கி, மல்லிகை மாலைகள் ஊடே கோழிக்கொண்டைப் பூக்களை வைத்துக் கட்டும் போது ரோஜாப்பூக்களின் தோற்றத்தைத் தருகிறது. இதனாலேயே இந்த பூக்களுக்கு எல்லா சீசனிலும் வரவேற்பு உள்ளது. உடுமலை பகுதியில் அதிக அளவில் பூக்கள் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டுவதில்லை .ஆனாலும் ஒருசில விவசாயிகள் மல்லிகை, ரோஜா, சம்பங்கி மற்றும் கோழிக்கொண்டை பூக்கள் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஒரே வித பயிர் சாகுபடி
தற்போது தமிழகம் முழுவதும் விதிக்கப்பட்டுள்ள தொடர் ஊரடங்கு காரணமாக கோவில்கள் அனைத்தும் பூட்டப்பட்டுள்ளன. அத்துடன் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாலும் தொற்று பரவல் குறித்த அச்சத்தாலும் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் பெருமளவில் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இதனால் மாலை கட்டும் தொழில் முடங்கியுள்ளதால் கோழிக்கொண்டைப் பூக்களை வாங்க ஆளில்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
உடுமலை சுற்றுவட்டாரப் பகுதி விவசாயிகள் அதிக அளவில் காய்கறிகள் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர்.ஒரேவிதமான பயிர் சாகுபடியில் அதிக எண்ணிக்கையிலான விவசாயிகள் ஈடுபடும் போது வரத்து அதிகரித்து விலை குறைவது இயல்பாகும். இதனால் காய்கறிகளுக்கு உரிய விலை கிடைக்காத நிலை தொடர்கிறது. இதனைத் தவிர்க்கும் விதமாக கோழிக்கொண்டை பூக்கள் சாகுபடி செய்திருந்தோம்.இவை மழைக் காலம், கோடைக் காலம், குளிர் காலம் என எல்லா பருவங்களுக்கும் ஏற்றதாக உள்ளது. கன மழைக் காலங்களில் மட்டும் பூக்கள் அழுகி பாதிப்பு ஏற்படும்.
ஓணம் பண்டிகை
பூக்கள் சாகுபடியைப் பொறுத்தவரை ஆண்டு முழுவதும் நல்ல விலை கிடைத்தாலும் சுப முகூர்த்த நாட்களில் அதிக விலைக்கு விற்பனையாகும்.இதனைக் கருத்தில் கொண்டு சுப முகூர்த்த தினங்கள் நிறைந்த வைகாசி மாதத்தில் அறுவடை செய்யும் வகையில் சாகுபடி மேற்கொண்டோம். ஆனால் தொடர் ஊரடங்கு காரணமாக பூக்களை வாங்குவதற்கு வியாபாரி யாரும் வரவில்லை.
இதனால் பூக்களை அறுவடை செய்யாமல் செடிகளிலேயே விட்டு வைத்திருக்கிறோம்.கோழிக்கொண்டைப் பூக்களைப் பொறுத்தவரை விதைகள் மூலமே உற்பத்தி செய்கிறோம். நடவு செய்த 40 நாட்களிலிருந்து பூக்கள் பறிக்கத் தொடங்கலாம். பூக்கள் உதிர்தல், நோய் தாக்குதல் போன்ற பாதிப்புகள் பெரிய அளவில் இருக்காது. பெரிய அளவிலான பராமரிப்பு தேவையில்லை.பூக்கத் தொடங்கிய பிறகு தினசரி வருமானம் தரக்கூடியது.கேரளாவில் ஓணம் பண்டிகை, தமிழகத்தில் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை போன்ற காலங்களில் நல்ல விலை கிடைக்கும்.ஒரு ஏக்கருக்கு 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் கிலோ வரை பூக்கள் கிடைக்கும் என பலவிதங்களில் திட்டமிட்டு சாகுபடிப் பணிகளை மேற்கொண்டோம். ஆனால் இப்போது தினசரி பயன்பாட்டுக்கான பொருள் என்பதாலும், தேவை அதிகமாக இருப்பதாலும் காய்கறிகளுக்கு நல்ல விலை கிடைத்து வருகிறது. பூக்கள் தான் கேட்க ஆளில்லாமல் பூத்துக் குலுங்குகின்றன. நேரடியாக வியாபாரிகள் வந்து வாங்காத நேரங்களில் பொள்ளாச்சி, கோவை போன்ற பகுதி பூ மார்கெட்டுகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்வோம்.தற்போது அதற்கும் வழியில்லாததால் ஒட்டுமொத்தமாக இழப்பு ஏற்பட்டுள்ளது'
இவ்வாறு வேதனை தெரிவித்தனர்.