பொத்தனூர் பேரூராட்சியில் ஊரடங்கை மீறி முட்டை விற்றவருக்கு ரூ.3 ஆயிரம் அபராதம்
பொத்தனூர் பேரூராட்சியில் ஊரடங்கை மீறி முட்டை விற்றவருக்கு ரூ.3 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டத்தில் முழு ஊரடங்கையொட்டி காய்கறிகளை வாகனங்கள் மூலம் பொதுமக்களின் பகுதிகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், மளிகை பொருட்களை வீடுகளுக்கு டோர் டெலிவரி செய்யவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் பரமத்திவேலூர் அருகே உள்ள பொத்தனூர் பேரூராட்சிக்குட்பட்ட வேலகவுண்டம்பட்டியில் ஊரடங்கு உத்தரவை மீறி சரக்கு வாகனத்தில் முட்டை விற்பனை நடைபெறுவதாக பேரூராட்சி நிர்வாகத்தினருக்கு புகார் சென்றது. அதன்பேரில் அங்கு சென்ற பேரூராட்சி செயல் அலுவலர் பாலசுப்பிரமணியன், துப்புரவு மேற்பார்வையாளர் குணசேகரன் மற்றும் பரமத்திவேலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உதயகுமார் ஆகியோர் முட்டை விற்ற நபரிடம் விசாரணை நடத்தினர். இதையடுத்து ஊரடங்கு உத்தரவை மீறி சரக்கு வாகனத்தில் முட்டை விற்றதாக கூறி அந்த நபருக்கு ரூ.3 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.