தர்மபுரி மாவட்டத்தில் மது விலக்கு வழக்குகளில் 264 பேர் கைது

மது விலக்கு வழக்குகளில் 264 பேர் கைது

Update: 2021-06-01 18:02 GMT
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டத்தில் தளர்வுகள் அற்ற ஊரடங்கு காலத்தில் மதுவிலக்கு தொடர்பான வழக்குகளில் 264 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
தொடர் கண்காணிப்பு
கொரோனா 2-வது அலை பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு தளர்வில்லா முழு ஊரடங்கை அமல்படுத்தி உள்ளது. இதையொட்டி தர்மபுரி மாவட்டத்தில் மதுக்கடைகள், மதுபானக் கூடங்கள் வணிக வளாகங்கள் அடைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் இருந்து மது பாட்டில்கள், மது பாக்கெட்டுகள் ஆகியவற்றை தர்மபுரி மாவட்டத்திற்கு கடத்தி வந்து விற்பனை செய்வதை தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாவட்ட எல்லைகளில் உள்ள சோதனைச்சாவடிகளில் போலீசார் தொடர் கண்காணிப்பு பணி மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
230 வழக்குகள்
கடந்த மே மாதம் 10-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை சோதனைச்சாவடிகள், மலை கிராமங்கள் உள்ளிட்ட பகுதிகளில் நடந்த சோதனையில் வெளிமாநில மது பாட்டில்களை கடத்தி வருதல், சாராயம் காய்ச்சுதல் உள்ளிட்ட மதுவிலக்கு குற்ற செயல்களில் ஈடுபட்ட 27 பெண்கள், 237 ஆண்கள் என மொத்தம் 264 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக 230 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மது பாட்டில்கள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 18 நான்கு சக்கர வாகனங்கள், 39 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதேபோல் மாவட்டம் முழுவதும் போலீசார் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்