கருப்பு பூஞ்சை நோய்க்கு சத்துணவு அமைப்பாளர் பலி

புதுக்கோட்டை மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை நோய்க்கு சத்துணவு அமைப்பாளர் பலியானார்.

Update: 2021-06-01 17:43 GMT
புதுக்கோட்டை, ஜூன்.2-
புதுக்கோட்டை மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை நோய்க்கு சத்துணவு அமைப்பாளர் பலியானார்.
ஒருவர் பலி
தமிழகத்தில் கொரோனா 2-வது அலை பரவி வருகிற நிலையில் கருப்பு பூஞ்சை நோய் தொற்றும் அச்சுறுத்தி வருகிறது. ஆங்காங்கே இந்நோய் தொற்றுக்கு சிலர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை நோய் தொற்றுக்கு 7 பேர் பாதிப்படைந்திருந்தனர். அவர்கள் வெவ்வேறு இடங்களில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தனர். இதில் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா வெள்ளக்கொல்லை கிராமத்தை சேர்ந்த சத்துணவு அமைப்பாளர் செல்வராஜ் (வயது 55) கருப்பு பூஞ்சை நோய்க்கு பாதிப்புக்குள்ளாகி இருந்தார். அவர் ஆரம்பநிலையில் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
முதல் பலி
பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த நிலையில் அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் செல்வராஜ் நேற்று பரிதாபமாக இறந்தார். இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, செல்வராஜ் இறந்ததை உறுதி செய்தனர்.
மேலும் மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை நோய் தொற்றுக்கு பாதிக்கப்பட்டவர்கள் 2 பேர் குணமடைந்து வீடு திரும்பியதாகவும், மற்றவர்கள் வெளியூர்களில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறினர். கருப்பு பூஞ்சை நோய்க்கு புதுக்கோட்டை மாவட்டத்தில் முதல் பலி ஏற்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்