முதல் போக பாசனத்திற்காக முல்லைப்பெரியாறு அணையில் தண்ணீர் திறப்பு
கம்பம் பள்ளத்தாக்கு முதல் போக பாசனத்திற்காக முல்லைப்பெரியாறு அணையில் இருந்து நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது. அமைச்சர் இ.பெரியசாமி அணையின் மதகை இயக்கி தண்ணீரை திறந்து வைத்தார்.
கூடலூர்:
கம்பம் பள்ளத்தாக்கு முதல் போக பாசனத்திற்காக முல்லைப்பெரியாறு அணையில் இருந்து நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது. அமைச்சர் இ.பெரியசாமி அணையின் மதகை இயக்கி தண்ணீரை திறந்து வைத்தார்.
விவசாயிகள் கோரிக்கை
தேனி மாவட்டத்தில் லோயர்கேம்ப் முதல் பழனிசெட்டிபட்டி வரை 14 ஆயிரத்து 707 ஏக்கர் பாசன பகுதி கம்பம் பள்ளத்தாக்கு என்று அழைக்கப்படுகிறது. இருபோக பாசனம் நடைபெறும் இந்த பகுதிக்கு முல்லைப்பெரியாறு அணை முக்கிய நீராதாரமாக விளங்கி வருகிறது. ஆண்டுதோறும் கம்பம் பள்ளத்தாக்கு முதல் போக பாசனத்திற்காக ஜூன் மாதம் 1-ந்தேதி முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால், அணைக்கு நீர்வரத்து இல்லை. அத்துடன் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடுவதில் காலதாமதம் ஏற்பட்டு வந்தது.
இந்தநிலையில் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில வாரங்களாக பலத்த மழை பெய்தது. இதனால் அணைக்கு கணிசமான நீர்வரத்து இருந்தது. அதன்படி அணையின் நீர்மட்டம் 131.30 அடியாக உயர்ந்தது. இதைத்தொடர்ந்து முதல் போக பாசனத்திற்காக முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என்று கம்பம் பள்ளத்தாக்கு பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அதன்பேரில் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
தண்ணீர் திறப்பு
இதையடுத்து கம்பம் பள்ளத்தாக்கு முதல் போக பாசனத்திற்காக முல்லைப்பெரியாறு அணையில் இருந்து நேற்று தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதற்கான நிகழ்ச்சி தேக்கடி மதகு பகுதியில் நடைபெற்றது. இதில் கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி கலந்துகொண்டு, மதகை இயக்கி தண்ணீரை திறந்து வைத்தார். அதன்படி கம்பம் பள்ளத்தாக்கு பாசனத்திற்காக வினாடிக்கு 200 கன அடி, தேனி மாவட்ட குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 100 கன அடி் என முல்லைப்பெரியாறு அணையில் இருந்து வினாடிக்கு 300 கன அடி வீதம் 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியில் தேனி மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி, எம்.எல்.ஏ.க்கள் கம்பம் ராமகிருஷ்ணன் (கம்பம்), மகாராஜன் (ஆண்டிப்பட்டி), சரவணக்குமார் (பெரியகுளம்), பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் எம்.சுகுமார், முன்னாள் எம்.எல்.ஏ. தங்கதமிழ்செல்வன் மற்றும் கம்பம் பள்ளத்தாக்கு பகுதி விவசாயிகள் கலந்துகொண்டனர்.
ஒத்துழைப்பு
இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், முல்லைப்பெரியாறு அணையில் இருந்து முதல் போக பாசனத்திற்காக தற்போது திறக்கப்பட்டுள்ள தண்ணீர் மூலம் உத்தமபாளையம் தாலுகாவில் 11 ஆயிரத்து 807 ஏக்கர் நிலமும், தேனி தாலுகாவில் 2 ஆயிரத்து 412 ஏக்கர் நிலமும், போடி தாலுகாவில் 488 ஏக்கர் நிலமும் என மொத்தம் 14 ஆயிரத்து 707 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. எனவே விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி குறுகிய கால நெற்பயிர்களை சாகுபடி செய்து பயனடைய வேண்டும். மழை பெய்யாமல் தண்ணீர் இருப்பு குறைந்துவிட்டால் முறை வைத்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படும். எனவே விவசாயிகள் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றனர்.
நேற்றைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 130.90 அடியாக இருந்தது. நீர்வரத்து வினாடிக்கு 503 கன அடியாக காணப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.