கூடுதல் விலங்குகளை கொண்டுவர பைகுல்லா பூங்கா 10 ஏக்கரில் விரிவாக்கம்; அதிகாரி தகவல்

கூடுதல் விலங்குகளை கொண்டுவர பைகுல்லா பூங்கா 10 ஏக்கரில் ரூ.175 கோடி செலவில் விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாக அதிகாரி சஞ்சய் திரிபாதி கூறினார்.

Update: 2021-06-01 10:04 GMT

10 ஏக்கர் விரிவாக்கம்

மும்பை பைகுல்லா பகுதியில் வீர்மாதா ஜிஜாபாய் போசலே உதயன் உயிரியல் பூங்கா அமைந்து உள்ளது. ராணி பூங்கா என அழைக்கப்படும் இது 53 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இங்கு தற்போது பென்குயின், புலி, மான், யானை, முதலை, நீர்யானை, பறவைகள், பூச்சி வகைகள் என 330 விலங்கினங்கள் உள்ளன. தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் ராணி பூங்காவுக்கு வந்து செல்வது வழக்கம். இந்தநிலையில் தற்போது ராணி பூங்கா 10 ஏக்கர் பரப்பில் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இந்த பகுதியில் மேலும் புதிய விலங்குகள் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட இருக்கிறது.

ரூ.175 கோடி செலவு

இதுகுறித்து பூங்கா இயக்குனர் டாக்டர் சஞ்சய் திரிபாதி கூறுகையில், "பூங்கா விரிவாக்க பணிக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. இதில் ஓட்டக சிவிங்கி, வெள்ளை சிங்கம், கருப்பு சிறுத்தை, சிம்பன்சி, நெருப்பு கோழி, சிறுத்தை உள்ளிட்ட 15 விலங்குகளுக்கான கூண்டுகள், வாழ்விடங்கள் அமைக்கப்பட உள்ளது. இந்த பணிகளுக்கு 2019-ம் ஆண்டு மத்திய அரசு அனுமதி வழங்கி இருந்தது. மேலும் பூங்கா விரிவாக்க பணிகள் 2 கட்டங்களாக ரூ.175 கோடி செலவில் நடைபெறும்" என்றார்.

மேலும் செய்திகள்