‘உங்களின் ஒத்துழைப்பால்தான் கொரோனாவை கட்டுப்படுத்த முடிகிறது'- தன்னார்வ அமைப்பு நிர்வாகிகளிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
‘உங்களின் ஒத்துழைப்பால்தான் கொரோனாவை கட்டுப்படுத்த முடிகிறது' என்று தன்னார்வ அமைப்பு நிர்வாகிகளிடம் பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
ஈரோடு
‘உங்களின் ஒத்துழைப்பால்தான் கொரோனாவை கட்டுப்படுத்த முடிகிறது' என்று தன்னார்வ அமைப்பு நிர்வாகிகளிடம் பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
தன்னார்வ அமைப்பினர்
பெருந்துறையில் உள்ள ஈரோடு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தனியார் பங்களிப்புடன் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 300 படுக்கைகள் அமைக்கப்பட்டு உள்ளன. அமைச்சர் சு.முத்துசாமியின் முயற்சியால் குறுகிய காலத்தில் அமைக்கப்பட்டுள்ளஇந்த மையத்தை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று பார்வையிட்டார்.
அப்போது ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணியிலும், கொரோனாவுக்கு சிறப்பு சிகிச்சை மையங்கள் அமைத்தும், பெருந்துறை மருத்துவக்கல்லூரி வளாகத்தில் கூடுதல் படுக்கை வசதிக்கான கட்டுமான ஏற்பாடுகளை செய்து வரும் தன்னார்வ அமைப்பு நிர்வாகிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார்.
மகிழ்ச்சி
அப்போது ஒளிரும் ஈரோடு அமைப்பு சார்பில் நிர்வாகிகள் சி.வெங்கடேஸ்வரன், சாரல் கணேசன், எம்.சி.ராபின், டாக்டர் கே.எம்.அபுல்ஹசன் ஆகியோர் சந்தித்து உரையாடினார்கள். ஒளிரும் ஈரோடு அமைப்பு சார்பில் பி.பி.அக்ரஹாரம் கிறிஸ்துஜோதி மருத்துவமனையுடன் இணைந்து 150 படுக்கைகள் அமைத்து கொரோனா பாதித்தவர்களுக்கு இலவச சிகிச்சை மற்றும் ஆக்சிஜன் தேவைப்படுபவர்களுக்கு சிகிச்சை அளித்து வருவது, இதுவரை சுமார் 1,000 பேர் குணம் அடைந்து சென்று இருப்பது, பெருந்துறை மருத்துவக்கல்லூரி வளாகத்தில் ரூ.50 லட்சம் செலவில் 40 படுக்கைகளுக்கு தேவையான ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் கட்டமைப்பு உருவாக்குதல், ரூ.2 கோடியில் 200 ஆக்சிஜன் படுக்கை வசதி அமைக்க 4 புதிய கட்டமைப்புகள் உருவாக்குதல் ஆகியவை குறித்து எடுத்துக்கூறினார்கள்.
இதுபோல் ரோட்டரி சங்கம் மூலம் 401 படுக்கைகளுக்கான கட்டமைப்பு ஏற்படுத்தப்படுவது உள்பட பல்வேறு பணிகள் குறித்து தன்னார்வலர் அமைப்புகள் கூறினார்கள். அவற்றை கவனமுடன் கேட்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ‘உங்களின் ஒத்துழைப்பால்தான் கொரோனாவை கட்டுப்படுத்த முடிகிறது. உங்களின் சேவை மகிழ்ச்சி அளிக்கிறது' என்று கூறினார்.