கொரோனா ஊரடங்கு எதிரொலி: சீர்காழி பஸ் நிலைய கடைக்காரர்கள் வாழ்வாதாரம் இழந்து தவிப்பு - நிவாரணம் வழங்க அரசுக்கு கோரிக்கை

கொரோனா ஊரடங்கு எதிரொலியால் சீர்காழி பஸ் நிலைய கடைக்காரர்கள் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகிறார்கள். அவர்களுக்கு நிவாரணம் வழங்க அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.

Update: 2021-05-30 12:01 GMT
சீர்காழி, 

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் இரண்டாம் கட்ட ஊரடங்கு அறிவித்து கடந்த 10-ந் தேதி முதல் செயல்படுத்தி வருகிறது. இதன் காரணமாக சீர்காழி பகுதியில் பால் கடை, மருந்தகம், உணவகம், பெட்ரோல் பங்க் மட்டுமே செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மற்ற அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் சீர்காழி புதிய பஸ், பழைய பஸ் நிலையம், வைத்தீஸ்வரன் கோவில் பஸ் நிலையம் ஆகிய பகுதியில் செயல்படும் நகராட்சி மற்றும் பேரூராட்சிக்கு சொந்தமான சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட டீக்கடை, வளையல் கடை, பேக்கரி, பூக்கடை, பழக்கடை, காலணி கடை, செல்போன் கடை, பெட்டிக்கடை உள்ளிட்ட கடைகள் அடைக்கப்பட்டதால் கடந்த ஆண்டு 6 மாதங்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.

இந்த நிலையில் மீண்டும் இந்த ஆண்டு தமிழக அரசு கடந்த 10-ந் தேதி முதல் முழு ஊரடங்கு அறிவித்ததால் மீண்டும் புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம் உள்ள கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டதால் தற்போது கடையில் உள்ள மிச்சர், ஸ்வீட், கார வகைகள், பழங்கள், கூல்ட்ரிங்க்ஸ், பூக்கள் உள்ளிட்டபொருள்கள் அனைத்தும் வீணாகி விட்டன. இதன் காரணமாக கடை உரிமையாளர்கள் தங்களுடைய வாழ்வாதாரத்தை இழந்து தவித்து கடும் இன்னலுக்கு உள்ளாகி வருகின்றனர்.

இதுகுறித்து கடை உரிமையாளர் பாலு கூறுகையில், கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக 6 மாத காலம் கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டன. தற்போது மீண்டும் கடந்த 10-ந் தேதி முதல் கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டு வர்த்தகர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றன.

முழுமையாக தொடர்ந்து கடைகள் அடைக்கப்பட்டதால், கடையில் உள்ள பொருள் அனைத்தும் வீணாகி விட்டன. எனவே அரசு, கடந்த ஓராண்டாக அடக்கப்பட்ட காலத்தில் வாடகை பாக்கியை நகராட்சி நிர்வாகம் தள்ளுபடி செய்ய வேண்டும். மேலும் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் கடைக்காரர்களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்றார்.

மேலும் செய்திகள்