ஆபத்தான முறையில் ஆற்றை கடந்து செல்லும் விவசாயிகள்
வத்திராயிருப்பு அருேக ஆபத்தான முறையில் ஆற்றை விவசாயிகள் கடந்து செல்வதால் பாலம் அமைத்து தர விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வத்திராயிருப்பு,
வத்திராயிருப்பு அருேக ஆபத்தான முறையில் ஆற்றை விவசாயிகள் கடந்து செல்வதால் பாலம் அமைத்து தர விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நெல் சாகுபடி
வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பிரதானமாக தென்னை, மா, நெல் விவசாயம் நடைபெற்று வருகிறது.
மாவட்டத்தின் முக்கிய அணையாக பிளவக்கல் பெரியார் அணையும், ேகாவிலாறு அணையும் உள்ளன. இந்த இரு அணைகளையும் நம்பி 40-க்கும் மேற்பட்ட கண்மாய்கள் பாசன வசதி பெறுகின்றன. இதன்மூலம் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.
நீர்வரத்து அதிகரிப்பு
இந்நிலையில் கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழையின் காரணமாக பிளவக்கல் பெரியார் அணை, கோவிலாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து தற்போது ஆறுகளில் நீர் வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது.
மேலும் வத்திராயிருப்பு தாலுகா பகுதிகளில் உள்ள கண்மாய்களும் ஓரளவுக்கு நீர் நிரம்பியுள்ளன. இந்தநிலையில் வத்திராயிருப்பு அருகே உள்ள கூமாபட்டி - பிளவக்கல் பெரியார் அணை செல்லும் சாலையில் ரஹ்மத் நகர் பகுதியில் உள்ள குணவந்தநேரி கண்மாயில் ஓரளவிற்கு தண்ணீர் வந்து நிரம்பியுள்ளது.
விவசாயிகள் சிரமம்
இந்த கண்மாயை சுற்றி நூற்றுக்கணக்கான ஏக்கரில் தென்னை, மா, நெல் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது.
குணவந்தநேரி கண்மாய் ஆற்றை கடந்து தான் விவசாயிகள் தங்களது நிலங்களுக்கு செல்கின்றனர். தற்போது இந்த ஆற்றில் நீர்வரத்து அதிகமாக உள்ளதால் விவசாயிகள் சிரமத்துடன் ஆற்றை கடந்து செல்கின்றனர்.
தற்போது மாங்காய் சீசன் என்பதால் மாங்காயை பறிக்கவும், தேங்காயை வெட்டவும் வேறு வழியின்றி ஆபத்தான நிலையில் இந்த ஆற்றை கடந்தே விவசாயிகள் செல்கின்றனர்.
எனவே விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு மேற்கண்ட பகுதியில் உள்ள ஆற்றை எளிதில் கடந்து செல்லும் வகையில் பாலம் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.