கடமலை பகுதியில் 300 லிட்டர் சாராய ஊறல் பறிமுதல்; மதுவிலக்கு போலீசார் நடவடிக்கை
கடமலை பகுதியில் 300 லிட்டர் சாராய ஊறல் பறிமுதல் செய்யப்பட்டது.
நாமக்கல், மே.30-
தமிழக அரசு கொரோனா பரவலை கட்டுப்படுத்த தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கை அமல்படுத்தி உள்ளது. இதையொட்டி டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு உள்ளன. இந்தநிலையில் ராசிபுரம் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட கடமலை பகுதியில் சிலர் சாராயம் காய்ச்சி விற்பனை செய்வதாக நாமக்கல் போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) சுஜாதாவிற்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் அந்த பகுதியில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராமு, மதுவிலக்கு போலீசாருக்கு அறிவுறுத்தினார். இதையடுத்து நாமக்கல் மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பூர்ணிமா, சப்-இன்ஸ்பெக்டர் தேசிங்கன் மற்றும் மதுவிலக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது கடமலையில் மர்ம நபர்கள் சாராயம் காய்ச்சி விற்பனை செய்வது தெரியவந்தது. தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டபோது 5 லிட்டர் சாராயம் மற்றும் 300 லிட்டர் சாராய ஊறல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக நாமக்கல் மதுவிலக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து சாராயம் காய்ச்சிய மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.