கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவ உபகரணங்களை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி வழங்கினார்
கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவ உபகரணங்களை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி, மாவட்ட கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரேவிடம் வழங்கினார்.
கரூர்
மருத்துவ உபகரணங்கள்
கரூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களின் சிகிச்சைக்குப் பயன்படும் வகையில் பல்வேறு தொழில்நிறுவனங்கள் சார்பிலும், தனிநபர்களின் சார்பிலும் வழங்கப்பட்ட ரூ.67 லட்சத்து 55 ஆயிரம் மதிப்பிலான ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகள், பல்ஸ் ஆக்சி மீட்டர் கருவிகள், ஆக்சிஜன் புளோ மீட்டர் கருவிகள் மற்றும் நிவாரண நிதி உதவிகளை, மின்சாரம் மற்றும் ஆயத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி, மாவட்ட கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரேவிடம் கரூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று வழங்கினார்.
பின்னர் அமைச்சர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படும் வகையில் மருத்துவ உபகரணங்களையும், நிதியுதவிகளையும் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலதிபர்கள், தொழில் நிறுவனங்கள் நல்உள்ளத்தோடு தொடர்ந்து வழங்கி வருகின்றனர்.
நிதி உதவிகள்
அந்த வகையில், கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஓ.பி.ஜி பவர் ஜெனரேட்டர்ஸ் சார்பில் ரூ.50 லட்சம் மதிப்பிலான தலா 10 லிட்டர் கொள்ளளவுள்ள 40 ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகளும், செந்தில்பாலாஜி பவுண்டேசன்ஸ் சார்பில் ரூ.7.5 லட்சம் மதிப்பிலான தலா 5 லிட்டர் கொள்ளளவுள்ள 10 ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகளும், சிவா டெக்ஸ்டைல்ஸ் சார்பில் ரூ.7.5 லட்சம் மதிப்பிலான தலா 5 லிட்டர் கொள்ளளவுள்ள 10 ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகளையும், சந்திரசேகரன் என்ஜினீயரிங் சார்பில் ரூ.1 லட்சம் மதிப்பிலான 30 ஆக்சிஜன் புளோ மீட்டர் கருவிகள், 20 பல்ஸ் ஆக்சிமீட்டர் கருவிகள் வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல ஆசிர்வாத் டெக்ஸ் சார்பில் ரூ.20 ஆயிரம், நவீனதகிருஷ்ணன் ரூ.10 ஆயிரம், தெய்வசிகாமணி ரூ.1 லட்சம், காஸ்மோபொலிடன்ஸ் கிளப் நிறுவனம் சார்பில் ரூ.25 ஆயிரம் நிவாரண உதவியாக வழங்கப்பட்டுள்ளது. ஆக மொத்தம் ரூ.67.55 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் மற்றும் நிதியுதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
இலவச உணவு
கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக ஒருவாரம் நீட்டிக்கப்பட்டுள்ள இந்த ஊரடங்கு காலத்தில் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த எவருக்கேனும் உணவுத்தேவையிருப்பின் அவர்களின் வீட்டுக்கேச் சென்று இலவசமாக உணவு வழங்கும் வகையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உணவுத்தேவைப்படுவோர் 9498747644, 9498747699 என்ற எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.
காலை உணவுத்தேவைப்டும் நபர்கள் முதல் நாள் இரவு 8 மணிக்குள்ளும், மதிய உணவு தேவைப்படும் நபர்கள் காலை 8 மணிக்குள்ளும், இரவு உணவு தேவைப்படும் நபர்கள் மதியம் 2 மணிக்குள்ளும் மேற்குறிப்பிட்ட எண்களில் தொடர்புகொண்டு தகவல் தெரிவித்தால் குறித்த நேரத்தில் உங்கள் வீடுகளுக்கே வந்து உணவு வழங்கப்படும்.
வீடுதேடி...
ஊரடங்கு காலம் முழுவதும் 3 வேளையும் உணவு தேவைப்படும் நபர்கள் ஒருமுறை தொடர்புகொண்டு தங்களுக்கு ஊரடங்கு முடியும்வரை 3 வேளை உணவுத்தேவை என்ற விபரத்தை தெரிவித்தால் போதும், ஒவ்வொரு முறையும் தொடர்புகொள்ளத் தேவையில்லை. தங்களின் தகவல்கள் குறித்துக்கொள்ளப்பட்டு குறித்த நேரத்திற்கு வீடுதேடி உணவு கொண்டு வந்து கொடுப்பார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில், அரவக்குறிச்சி எம்.எல்.ஏ. பி.ஆர்.இளங்கோ, மாவட்ட வருவாய் அலுவலர் லியாகத், கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் முத்துச்செல்வன், சுகாதாரத்துறை இணை இயக்குனர் ஞானக்கண்பிரேம்நிவாஸ், துணை இயக்குனர் சந்தோஷ்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
முதல்-அமைச்சர் நிவாரண நிதி
கரூர் மாவட்டம் புன்னம்சத்திரத்தை சேர்ந்த சகோதரர்களான 7-ம் வகுப்பு மாணவர் சார்நித், 10-ம் வகுப்பு மாணவர் சன்ஜித் ஆகியோர் சேர்ந்து தங்கள் உண்டியலில் சேர்த்து வைத்த ரூ.10 ஆயிரத்தை முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு, மாவட்ட கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே முன்னிலையில், மின்சாரத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜியிடம் வழங்கினர். இதையடுத்து அந்த சகோதரர்களையும், அவர்களது பெற்றோரையும் அமைச்சர் வெகுவாக பாராட்டினார்.