கொரோனாவால் இறந்தவரின் உடலை அடக்கம் செய்த நகராட்சி தூய்மை பணியாளர்கள்
வால்பாறையில் கொரோனாவால் இறந்தவரின் உடலை நகராட்சி தூய்மை பணியாளர்கள் அடக்கம் செய்தனர்.
வால்பாறை
வால்பாறையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சுகாதார பணியாளர்கள், வருவாய் துறையினர், நகராட்சி நிர்வாகத்தினர், வால்பாறை போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
வால்பாறை நகராட்சி ஆணையாளர் சுரேஷ்குமார் தலைமையில் துப்புரவு அதிகாரி செல்வராஜ் முன்னிலையில் வீதிகள் தோறும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. மேலும் கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களையும் தூய்மை பணியாளர்கள் பாதுகாப்பான முறையில் அடக்கம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு இஞ்சிப்பாறையை சேர்ந்த எஸ்டேட் தொழிலாளி ஒருவர் கொரோனாவுக்கு உயிரிந்தார். இதனைத்தொடர்ந்து தூய்மை பணியாளர்கள் முழு கவச உடை அணிந்து தொழிலாளியின் உடலை ஆஸ்பத்திரியில் இருந்து பெற்று, உரிய பாதுகாப்புடன் அடக்கம் செய்தனர். இதற்கு சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.