சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகளின் நிலையை அறிய உதவி மையம் தொடக்கம்

சிவகங்கை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகளின் உடல்நிலைபற்றி தெரிந்து கொள்ள உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது என்ற கலெக்டர் மதுசூதன் ரெட்டி கூறினார்

Update: 2021-05-29 17:49 GMT
சிவகங்கை
சிவகங்கை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகளின் உடல்நிலைபற்றி தெரிந்து கொள்ள உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது என்ற கலெக்டர் மதுசூதன் ரெட்டி கூறினார்.
கலெக்டர் ஆய்வு
சிவகங்கை அல்லூர்-பனங்காடி ரோட்டில் அரசு மருத்துவமனைகளுக்கு தேவையான மருந்துகளை வழங்கும் அரசு கிட்டங்கி உள்ளது. இந்த கிட்டங்கியில் கலெக்டர் மதுசூதன்ரெட்டி நேற்று ஆய்வு செய்தார். அப்போது கிட்டங்கியில் இருப்பில் உள்ள மருந்துகளின் விவரம், அரசு மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்ட மருந்துகளிள் விவரம் அடங்கிய பதிவேடுகளை பார்த்து ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-
சிவகங்கையில் உள்ள இந்த மருந்துக் கிட்டங்கியில் இருந்து தான் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் 18 அரசு மருத்துவமனைகள், 50 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் 4 இ.எஸ்.ஐ. மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு தேவையான அனைத்துவகை மருந்துகளும் மற்றும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் மருத்துவ பணியாளர் களுக்கு வழங்கப்படும் முக கவசம், கவச உடை போன்ற அத்தியாவசிய பொருட்கள் முதல் அனைத்து மருந்துகளும் தேவைக்கேற்ப எடுத்து செல்லப்படுகின்றது. 
மேலும் இவைகளால் தட்டுப்பாடு ஏற்படாதவாறு மருந்துக்கிடங்கிற்கு தேவையான மருந்துகள் கையிருப்பில் இருப்பில் உள்ளதா என்பதை அலுவலர்கள் கண்காணித்து வருகின்றனர். தற்போதுள்ள சூழ்நிலையில் போதுமான அளவு மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் கையிருப்பில் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். 
இந்த ஆய்வின்போது மருந்துக்கிடங்கு கண்காணிப்பு அலுவலர் சரவணன்போஸ் உடனிருந்தார்.
உதவிமையம் தொடக்கம்
மேலும் கலெக்டர் மதுசூதன் ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-
சிவகங்கை மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றன. இங்கு் சிகிச்சைக்காக வந்தவர்களின் உறவினர்கள் அதிக அளவு மருத்துவமனையில் கூடுவதாகவும், இங்கும் அங்கும் செல்வதாலும் மருத்துவ அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. இது மட்டுமன்றி தொற்று உள்ளவர்களிடம் உறவினர்கள் அவ்வப்போது செல்வதால் அவர்களுக்கும் தொற்று வரும் நிலை ஏற்படும். 
எனவே சிகிச்சை பெற்று வருபவர்களின் நிலைக்கேற்ப மருத்துவர்களின் அனுமதி பெற்றவர்கள் மட்டுமே நோயாளிகளிடம் உடன் இருக்க அனுமதிக்கப்படுவார்கள். மற்றபடியாக நோயாளிகளுக்கான சிகிச்சை மற்றும் அவர்களின்நலன் குறித்து கேட்டறிந்து கொள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு பணிபுரியும் மருத்துவர்கள், நோயாளிகளின் நலன் குறித்து கேட்டறிந்து செல்லலாம். எனவே, நோயாளிகளின் உறவினர்கள் உதவி மையத்தை அணுகி விவரம் தெரிந்து கொள்ளலாம்.
 இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்