சுகாதார பணிகளில் தூய்மை பணியாளர்கள் மும்முரம்
கூடலூர் பகுதியில் சுகாதார பணிகளில் தூய்மை பணியாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ஊக்கத்தொகை வழங்க கோரிக்கை விடுத்து உள்ளனர்.
கூடலூர்
கூடலூர் பகுதியில் சுகாதார பணிகளில் தூய்மை பணியாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ஊக்கத்தொகை வழங்க கோரிக்கை விடுத்து உள்ளனர்.
முழு ஊரடங்கு
தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் சுகாதாரத்துறையினர் உள்பட பல்வேறு துறையினரும் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் முன்கள பணியாளர்களாக அறிவிக்கப்பட்டு உள்ளனர்.
இதற்கிடையில் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் பொதுமக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர். மேலும் வாகன போக்குவரத்து இல்லை. அத்தியாவசிய மற்றும் அவசர தேவைக்கு மட்டும் வெளியே செல்ல அனுமதி வழங்கப்படுகிறது.
சுகாதார பணிகள்
இந்த நிலையில் நகர மற்றும் கிராம பகுதிகளில் குப்பைகளை அகற்றுவது உள்ளிட்ட சுகாதார பணிகளில் தூய்மை பணியாளர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கிருமி நாசினி தெளித்தல், பிளீச்சிங் பவுடர் தூவுதல் போன்ற வேலைகளையும் செய்கின்றனர்.
முழு ஊரடங்கிலும் அவர்கள் தங்களது சேவையை தளராமல் மும்முரமாக செய்கின்றனர். இதனிடையே கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தீவிரமாக இறங்கி உள்ள டாக்டர்கள் உள்ளிட்ட மருத்துவ பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது.
ஊக்கத்தொகை
ஆனால் தூய்மை பணியாளர்களுக்கு இதுவரை ஊக்கத்தொகை வழங்குவது தொடர்பாக எந்த அறிவிப்பும் வரவில்லை. இதனால் அவர்கள் மன அழுத்தத்துக்கு ஆளாகி உள்ளனர். மேலும் தங்களது ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர். இதுகுறித்து தூய்மை பணியாளர்கள் கூறியதாவது:-
கடந்த ஆண்டு முதல் இந்த ஆண்டு வரை கொரோனா தடுப்பு பணியின் ஒரு பகுதியான சுகாதார பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறோம். அதில் பெரும்பாலான தூய்மை பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகிறோம். கூடுதல் பணிச்சுமை இருந்தாலும், அதை கண்டு கொள்வது இல்லை. எனவே எங்களுக்கு அரசு ஊக்கத்தொகை உள்பட பல்வேறு சலுகைகளை வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.