சமவெளி பகுதியில் இருந்து ஊட்டிக்கு தினமும் 15 டன் காய்கறிகள் கொண்டு வரப்படுகிறது
சமவெளி பகுதியில் இருந்து ஊட்டிக்கு தினமும் 15 டன் காய்கறிகள் கொண்டு வரப்படுகிறது. இதை அதிக விலைக்கு விற்கக்கூடாது என்று வியாபாரிகளுக்கு, அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.
ஊட்டி,
கொரோனா பரவலை தடுக்கும் வகையில் நீலகிரி மாவட்டத்தில் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமலில் உள்ளது. காய்கறி, மளிகை பொருட்கள் உள்பட அத்தியாவசிய கடைகள் திறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இதனால் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்ய வாகனங்கள் மூலம் காய்கறிகள், பழங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சமையலுக்கு மலை காய்கறிகள் மட்டுமின்றி சமவெளி பகுதிகளில் விளையும் காய்கறிகளும் இன்றியமையாதது.
இதையடுத்து கர்நாடகா மாநிலம் மைசூரு மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து காய்கறிகள் தினமும் வாகனங்களில் ஊட்டி மத்திய பஸ் நிலையத்துக்கு கொண்டு வரப்படுகிறது. அங்கு மொத்த வியாபாரிகளிடம் இருந்து சிறு, குறு வியாபாரிகள் காய்கறிகளை வாங்குகின்றனர்.
கத்தரிக்காய், தக்காளி, வெண்டைக்காய், புடலங்காய், சுரைக்காய், மிளகாய், கறிவேப்பிலை, தேங்காய், பூசணிக்காய், பெரிய வெங்காயம், சின்ன வெங்காயம் போன்றவை தினமும் 15 டன் அளவில் கொண்டு வரப்படுகிறது.
இந்த காய்கறிகளை பெற கிராமப்புறங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் விற்பனை செய்ய அனுமதி சீட்டுகள் பெற்ற வாகனங்கள் அணிவகுத்து நிற்பதை காண முடிகிறது. தங்களுக்கு தேவையான காய்கறிகளை வாங்கி வாகனங்களில் ஏற்றிய பின்னர் பல்வேறு இடங்களுக்கு விற்பனை செய்ய கொண்டு செல்கின்றனர்.
அந்த வாகனங்களில் அதிக விலைக்கு காய்கறிகள், பழங்கள் விற்பனை செய்வதாக புகார்கள் வந்தன. இதை தொடர்ந்து நேற்று தோட்டக்கலை உதவி இயக்குனர் சுரேஷ் மற்றும் வேளாண்துறை அதிகாரிகள் ஊட்டி மத்திய பஸ் நிலையம், என்.சி.எம்.எஸ். வாகன நிறுத்தும் இடத்துக்கு சென்று வாகனங்களில் காய்கறிகள், பழங்கள் விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கு அறிவுரைகள் வழங்கினர்.
வாகனங்கள் முன்பு பொதுமக்களுக்கு தெரியும் வகையில் விலைப்பட்டியல் ஒட்ட வேண்டும். விலை அதிகமாக விற்பனை செய்யக்கூடாது. அதிக விலைக்கு விற்பனை செய்வது குறித்து புகார் வந்தால் உரிமம் ரத்து செய்யப்படும் என்று எச்சரிக்கை விடுத்தனர்.