மூங்கில்துறைப்பட்டு அருகே மர்ம விலங்கு கடித்து 15 ஆடுகள் செத்தன

மூங்கில்துறைப்பட்டு அருகே மர்மவிலங்கு கடித்து 15 ஆடுகள் செத்த சம்பவம் குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2021-05-29 15:57 GMT
மூங்கில்துறைப்பட்டு

20-க்கும் மேற்பட்ட ஆடுகள்

மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள மணலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தேவராஜ்(வயது 52). இவர் 20-க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகிறார்.
இந்த நிலையில் தேவராஜ் நேற்று முன்தினம் மேய்ச்சலுக்காக ஒட்டிச் சென்ற ஆடுகளை மாலையில் தனது வீட்டின் கொட்டகையில் கட்டி போட்டார்.
பின்னர் நேற்று காலை எழுந்து பார்த்தபோது 15 ஆடுகள் செத்து கிடந்தன. சில ஆடுகள் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தன. இதைப்பார்த்து தேவராஜ் அதிர்ச்சி அடைந்தார். 

வனத்துறையினர் விசாரணை

இது குறித்து வருவாய்துறை மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் கிராம நிர்வாக அலுவலர் சரவணன், வடபொன்பரப்பி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
அந்த பகுதியில் வனம் மற்றும் மலைப் பகுதிகள் உள்ளதால் இரவு நேரத்தில் மர்ம விலங்கு வந்து ஆடுகளை கடித்து கொன்று இருப்பது தெரிந்தது. இது குறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே அவர்களும் சம்பவ இடத்தை பார்வையிட்டு அங்கிருந்தவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

பொதுமக்கள் அச்சம்

மணலூர் கிராமத்தில் கடந்த 2 மாதங்களாக இரவு நேரங்களில் மர்ம விலங்குகள் கிராமத்துக்குள் புகுந்து ஆடு, மாடுகளை கடித்து கொல்லும் சம்பவம் தொடர்கதையாக நிகழ்ந்து வருவது பொதுமக்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்