ஆக்சிஜன் வசதியுடன் 200 படுக்கைகள் அமைக்கும் பணி ஆய்வு: கொரோனா 3-வது அலையை எதிர்கொள்ள தயார் - பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி

தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடன் 200 படுக்கைகள் அமைக்கும் பணியை ஆய்வு செய்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கொரோனா 3-வது அலையை எதிர்கொள்ள தயார் என கூறினார்.

Update: 2021-05-29 15:15 GMT
தஞ்சாவூர்,

தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்காக கூடுதலாக ஆக்சிஜன் வசதியுடன் 200-க்கும் அதிகமான படுக்கைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்றுபிற்பகல் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தஞ்சை மாவட்டத்தை பொறுத்தவரை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அமல்படுத்தியுள்ள முழு ஊரடங்கு மிகவும் பயனுள்ளதாகவே இருக்கிறது. தஞ்சை, திருவையாறு, ஒரத்தநாடு ஆகிய சட்டசபை தொகுதிகளுக்கு நேரடியாக சென்று ஆய்வு செய்தோம். அங்குள்ள மக்கள், முழு ஊரடங்கை வெற்றிகரமாக செய்துள்ளனர். அந்த அளவுக்கு ஒத்துழைப்பு கொடுத்தால் தான் கொரோனா தொற்றுக்கான தொடர்பு சங்கிலியை அறுக்க முடியும்.

முழு ஊரடங்கு நடக்கும்போது மக்களுக்கு தேவையான காய்கறிகளை எப்படி கொண்டு செல்ல வேண்டும் என்பதையும் முதல்-அமைச்சர் உணர்ந்து 420-க்கும் மேற்பட்ட வண்டிகளை தயார் செய்து கொடுத்துள்ளோம். தஞ்சை மாவட்டத்தில் 589 ஊராட்சிகள் உள்ளன. ஒரு ஊராட்சிக்கு ஒரு வண்டியை கொடுக்க வேண்டும் என்று எம்.எல்.ஏ.க்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இன்னும் 160, 170 வண்டிகள் தேவைப்படுகிறது. அதற்கான ஏற்பாட்டையும் செய்து கொண்டு இருக்கிறோம். மக்களை பொறுத்தவரை எந்தவித அச்சஉணர்வுக்கும் ஆளாகாமல் அவர்கள் எப்படி வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டு இருப்பவர்களை பாதுகாக்க வேண்டும். அவர்களுக்கு உள்ளாட்சி பிரதிநிதிகளை கொண்டு அரசு என்னென்ன செய்ய நினைக்கிறதோ அதை செயல்படுத்த அனைத்து வழிகளையும் செய்து கொண்டு இருக்கிறோம்.

தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் 200-க்கும் மேற்பட்ட படுக்கைகள் தயார் செய்ய போகிறோம். போர்க்கால அடிப்படையில் உடனடியாக செய்கிறோம். 4 நாட்களில் இந்த பணி நிறைவடைந்து விடும். போர்க்கால அடிப்படையில் செய்வதால் எங்கையாவது தட்டுப்பாடு இருக்கிறதா? அதனால் தான் செய்கிறீர்களா? என்று கேட்டால் அப்படி இல்லை. எங்களது நோக்கம் என்பது 3-வது அலையை எதிர் கொள்வதற்காக எல்லா விதத்திலும் தயார் நிலையில் இருக்கிறோம். படுக்கைகள் ஏற்பாடு செய்வதாக இருந்தாலும் சரி, ஆக்சிஜன் தயார் செய்வதாக இருந்தாலும் சரி எல்லா வகையிலும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்பதற்காக இப்படிப்பட்ட ஏற்பாடுகளை செய்து இருக்கிறோம்.

2 நாளைக்கு ஒருமுறை 30 ஆயிரம் தடுப்பூசிகள் வந்து கொண்டு இருக்கிறது. மத்தியஅரசிடம் கேட்டுள்ளோம். முடிந்தஅளவுக்கு முன்கள பணியாளர்களுக்கு கொடுத்து வருகிறோம். வருகிற தடுப்பூசியை அனைவருக்கும் பிரித்து கொடுத்து சரி செய்து கொண்டு இருக்கிறோம். ஆன்லைன் வகுப்பு நடத்தும்போது ஆசிரியர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்காக ஒரு கமிட்டியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆரம்பித்து இருக்கிறார். இந்த மாதிரி புகார்கள் வரும்போது, அது உண்மை தானா? என ஆராய்ந்து உண்மை தன்மை இருக்கும் பட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படும். தவறு யார் செய்தாலும் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சொல்லி இருக்கிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின்போது தமிழகஅரசின் தலைமை கொறடா கோவி.செழியன், கலெக்டர் கோவிந்தராவ், எம்.பி.க்கள் ராமலிங்கம், சண்முகம், எம்.எல்.ஏ.க்கள் துரை.சந்திரசேகரன் (திருவையாறு), டி.கே.ஜி.நீலமேகம் (தஞ்சை), சாக்கோட்டை அன்பழகன் (கும்பகோணம்), ஜவாஹிருல்லா (பாபநாசம்), மாவட்ட ஊராட்சிக்குழு தலைவி உஷா மற்றும் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்