மளிகை கடைகளில் சில்லரை விற்பனை செய்யக்கூடாது - கலெக்டர் தகவல்
வேலூர் மாவட்டத்தில் உள்ள மளிகை கடைகளில் பொதுமக்களுக்கு சில்லரை விற்பனையில் பொருட்கள் கொடுக்க கூடாது. வாகனங்களில் வீடுகள்தோறும் வழங்க வேண்டும் என்று ஆலோசனை கூட்டம் வேலூர் கலெக்டர் (பொறுப்பு) பார்த்திபன் கூறினார்.
வேலூர்
வேலூர் மாவட்டத்தில் உள்ள மளிகை கடைகளில் பொதுமக்களுக்கு சில்லரை விற்பனையில் பொருட்கள் கொடுக்க கூடாது. வாகனங்களில் வீடுகள்தோறும் வழங்க வேண்டும் என்று ஆலோசனை கூட்டம் வேலூர் கலெக்டர் (பொறுப்பு) பார்த்திபன் கூறினார்.
ஆலோசனை கூட்டம்
வேலூர் மாவட்டத்தில் தளர்வுகள் அல்லாத முழுஊரடங்கு காலத்தில் காய்கறி, மளிகை பொருட்களை தங்கு தடையின்றி பொதுமக்களுக்கு வினியோகம் செய்து தொடர்பான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் திருகுணஅய்யப்பத்துரை, வேலூர் மாநகராட்சி கமிஷனர் சங்கரன், வேளாண்மை இயக்குனர் ரேணுகாம்பாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்துக்கு வேலூர் மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) பார்த்திபன் தலைமை தாங்கி பேசியதாவது:-
கொரோனா பரவலை கட்டுப்படுத்த வருகிற 7-ந் தேதி வரை தளர்வுகள் அல்லாத முழுஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் தற்போது வாகனங்கள், தள்ளுவண்டியில் காய்கறிகள், பழங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மளிகை பொருட்கள் வாகனங்களில் விற்பனை
தினமும் 250 டன் காய்கறி, பழங்கள் மொத்த மார்க்கெட்டில் இருந்து கொள்முதல் செய்யப்படுகிறது. இதன் அளவு குறையாமல் கொள்முதல் செய்து, அனைத்து பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கும் கிடைக்கும்படி பார்த்து கொள்ள வேண்டும்.
காய்கறி, பழங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய கூடாது. மளிகை பொருட்கள் 3 அல்லது 4 சக்கர வானங்கள் மூலமே விற்பனை செய்ய வேண்டும்.
கடைகளில் பொதுமக்களுக்கு சில்லரை விற்பனையில் எவ்வித பொருட்களும் கொடுக்க கூடாது. அதைமீறி வழங்கும் கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
மளிகை கடைகள் திறக்கவும், மளிகை பொருட்கள் கொண்டு செல்லும் வாகனங்களுக்கும் சம்பந்தப்பட்ட பகுதி அதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டும். பொதுமக்கள் ஆர்டர் வழங்கினால் அதன்பேரில் கடையை திறந்து பொருட்கள் எடுத்து அவர்களின் வீட்டிற்கு கொண்டு செல்லலாம்.
மாவட்டத்தின் அனைத்து பகுதியில் உள்ள மளிகை கடைகள், சூப்பர் மார்க்கெட்டுகள் உரிய அனுமதியுடன் மளிகை பொருட்கள் விற்பனை செய்ய அனுமதி உண்டு.
இவ்வாறு கலெக்டர் கூறினார்.
இதில், தோட்டக்கலைத்துறை, உள்ளாட்சி அமைப்பினர், வேளாண்மைத்துறை, கூட்டுறவுத்துறை, வியாபாரிகள் சங்கத்தினர் பலர் கலந்து கொண்டனர்.