சீர்காழி பகுதியில் வயல்களுக்கு சென்று பழங்கள், காய்கறிகள் கொள்முதல் செய்ய வியாபாரிகளுக்கு அனுமதி - தோட்டக்கலைத்துறை சார்பில் வழங்கப்பட்டது
சீர்காழி பகுதியில் வயல்களுக்கு சென்று பழங்கள், காய்கறிகள் கொள்முதல் செய்ய விவசாயிகளுக்கு தோட்டக்கலைத்துறை சார்பில் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
சீர்காழி,
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, செம்பனார்கோவில், கொள்ளிடம், ஆகிய வட்டாரங்களில் ஊரடங்கு காலத்தில் பொது மக்களுக்கு தடையின்றி காய்கறி மற்றும் பழங்கள் கிடைத்திடும் வகையில் தோட்டக்கலைத்துறை சார்பில், சாகுபடி செய்யப்பட்ட வயல்கள் மற்றும் தோட்டங்களுக்கு நேரடியாக சென்று பழங்கள், காய்கறிகள் கொள்முதல் செய்ய விவசாயிகள் மற்றும் வியாபாரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
இந்த பணியில் தோட்டக்கலை உதவி இயக்குனர் பொன்னி, தோட்டக்கலை அலுவலர் சுகன்யா, உதவி தோட்டக்கலை அலுவலர் குமரேசன் ஆகியோர் நேரடியாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து தோட்டக்கலை உதவி இயக்குனர் பொன்னி கூறுகையில், அந்தந்த வட்டாரங்களில் தோட்டக்கலைத்துறை மூலம் நடமாடும் காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை செய்ய வண்டிகள் இயக்கப்படுகிறது.
தர்ப்பூசணி, முலாம்பழம், வாழை, கிர்னி, வெள்ளரிப்பழம், மாம்பழம், பலாப்பழம் போன்ற பழங்கள் காய்கறிகள் தேக்க நிலை ஏற்படாமல் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படாத வகையில் விற்பனைக்கு கொண்டுசெல்ல தோட்டக்கலைத்துறை மூலம் அனுமதி கடிதம் வழங்கப்பட்டு வருகிறது. இதனை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.