விழுப்புரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 3 இடங்களில் ஊரடங்கு காலம் முடியும் வரை ஏழை மக்களுக்கு உணவு வழங்கும் பணி - அமைச்சர் பொன்முடி தொடங்கி வைத்தார்
விழுப்புரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 3 இடங்களில் ஊரடங்கு காலம் முடியும் வரை ஏழை மக்களுக்கு உணவு வழங்கும் பணியை அமைச்சர் பொன்முடி தொடங்கி வைத்தார்.
விழுப்புரம்,
தி.மு.க. தலைவரும் தமிழக முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க விழுப்புரம் சட்டமன்ற அலுவலகம் முன்பும், விழுப்புரம் பழைய பஸ் நிலையம் மற்றும் வளவனூர் பேரூராட்சி பஸ் நிலையம் அருகிலும் அன்புச்சுவர் என்ற ஒன்றிணைவோம் வா திட்டத்தின் மூலம் கொரோனா ஊரடங்கு காலம் முடியும் வரை ஏழை, எளிய மக்களுக்கு தினந்தோறும் காலையில் சிற்றுண்டியும், மதியம் உணவும் அன்னதானமாக வழங்குவதற்கு விழுப்புரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் டாக்டர் இரா.லட்சுமணன் ஏற்பாடு செய்துள்ளார்.
இதையொட்டி விழுப்புரம் சட்டமன்ற தொகுதி அலுவலகம், பழைய பஸ் நிலையம், வளவனூர் ஆகிய இடங்களில் நடந்த ஒன்றிணைவோம் வா நிகழ்ச்சிக்கு டாக்டர் லட்சுமணன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மத்திய மாவட்ட செயலாளர் புகழேந்தி எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியை உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி தொடங்கி வைத்து ஏழை, எளிய மக்களுக்கு அன்னதானத்தை வழங்கினார். இந்த 3 இடங்களிலும் ஊரடங்கு காலம் முடியும் வரை தினமும் காலை 8.30 மணி முதல் சிற்றுண்டியும், மதியம் 12.30 மணி முதல் உணவும் வழங்கப்படும்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் ஜெயச்சந்திரன், மாவட்ட பொருளாளர் ஜனகராஜ், துணை செயலாளர் புஷ்பராஜ், விழுப்புரம் நகர செயலாளர் சக்கரை, வளவனூர் பேரூராட்சி கழக செயலாளர் ஜீவா, ஒன்றிய செயலாளர்கள் மும்மூர்த்தி, தெய்வசிகாமணி, கல்பட்டு ராஜா, பிரபாகரன், நகர துணை செயலாளர் புருஷோத்தமன், முன்னாள் நகரமன்ற கவுன்சிலர் மணவாளன், மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் ஸ்ரீவினோத், நகர இளைஞரணி அமைப்பாளர் மணிகண்டன், வக்கீல்கள் ஏழுமலை, சுவைசுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.