சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் அரசியல் செய்ய வேண்டாம் சேலத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி

சேலத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி

Update: 2021-05-28 23:00 GMT
சேலம்:
போர்க்கால அடிப்படையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனவே சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் அரசியல் செய்ய வேண்டாம் என்று சேலத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.
சிகிச்சை அளிக்கும் பணி
சேலம் இரும்பாலை வளாகத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் 500 ஆக்சிஜன் படுக்கை வசதியுடன் கூடிய சிறப்பு சிகிச்சை மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இங்கு நேற்று மாலை முதல் கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கும் பணி தொடங்கியது. 
இதனை தமிழக மின்சார துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, மாவட்ட கலெக்டர் கார்மேகம், எஸ்.ஆர் பார்த்திபன் எம்.பி., வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
பேட்டி
தொடர்ந்து அமைச்சர் வி.செந்தில் பாலாஜி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சேலம் இரும்பாலை வளாகத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் 500 ஆக்சிஜன் படுக்கை வசதிகளுடன் சிறப்பு சிகிச்சை மையத்தை சமீபத்தில் சேலம் வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தற்போது இந்த கொரோனா சிறப்பு சிகிச்சை மையம் நோயாளிகளின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. 
இரும்பாலை வளாகத்தில் 12 நாட்களில் 500 ஆக்சிஜன் படுக்கை வசதியுடன் கொரோனா சிறப்பு சிகிச்சை மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தமிழக முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று 21 நாட்களில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து வருகிறார். ஆனால் சேலம் மாவட்டத்தை சேர்ந்த சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, அரசின் மீது குற்றச்சாட்டை தெரிவிக்க வேண்டும் என்ற அடிப்படையில் தவறான கருத்துகளை கூறி வருகிறார். 
அரசியல் செய்ய வேண்டாம்
சேலம் மாவட்டம் முழுவதும் 11,500 படுக்கை வசதிகள் பயன்பாட்டில் உள்ளது. ஆனால் சேலம் மாவட்டத்தில் 3,800 படுக்கை வசதிகள் மட்டுமே உள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் மார்ச் மாதம் எடுத்துக்கொண்டால் தினமும் சராசரியாக சேலம் மாவட்டத்தில் சுமார் 1,412 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது தினமும் 5,820 பேருக்கு பரிசோதனை செய்யப்படுகிறது. 
சேலம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு மற்றும் தடுப்பு பணிகள் குறித்து கலெக்டர் அலுவலகத்தில் அவ்வப்போது ஆய்வு கூட்டங்களை நடத்தி வருகிறோம். அப்போது மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு முறையாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அ.தி.மு.க.வை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் வரவில்லை. கொரோனா தடுப்பு குறித்து அரசியல் பாகுபாடு இல்லாமல் அரசுக்கு நல்ல ஆலோசனைகளை கூறினால் அதை தமிழக அரசு ஏற்க தயாராக உள்ளது. அதைவிடுத்து கொரோனா விஷயத்தில் அரசியல் செய்ய வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். 
65 டாக்டர்கள்
சேலம் மாவட்டத்திற்கு புதிதாக 65 அரசு டாக்டர்கள், 130 செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இவர்கள் அனைவரும் கொரோனா பணியில் ஈடுபடுவார்கள். சேலம் இரும்பாலை வளாகத்தில் கூடுதலாக 500 ஆக்சிஜன் படுக்கை வசதிகள் விரைவில் ஏற்படுத்தப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். 
இவ்வாறு அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.

மேலும் செய்திகள்