சேலம் மாவட்டத்தில் ஒரே நாளில் 575 வாகனங்கள் பறிமுதல்
575 வாகனங்கள் பறிமுதல்
சேலம்:
சேலம் மாவட்டத்தில் போலீசார் நடத்திய சோதனையில் நேற்று ஒரே நாளில் 575 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தீவிர சோதனை
தமிழகத்தில் கடந்த 24-ந்தேதி முதல் தளர்வில்லா முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. எனினும் ஒரு சிலர் தேவையின்றி வாகனங்களில் வெளியே சுற்றித்திரிகிறார்கள்.
இதைத்தொடர்ந்து சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ்குமார் உத்தரவின்பேரில் மாநகரில் பல இடங்களில் தடுப்புகள் அமைத்து போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று அத்தியாவசிய தேவையின்றி மோட்டார் சைக்கிள்களில் சுற்றியவர்களை வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார் பிடித்தனர். அதன்படி மாநகர் பகுதியில் தேவையின்றி வெளியில் சுற்றியவர்களிடம் இருந்து 222 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர். அதேபோன்று முக கவசம் அணியாமல் சுற்றித்திரிந்த 238 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
வாகனங்கள் பறிமுதல்
இதேபோன்று சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா கனிக்கர் உத்தரவின்பேரில் பல்வேறு இடங்களில் போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது தேவையில்லாமல் சுற்றியவர்களிடம் இருந்து 348 மோட்டார் சைக்கிள் மற்றும் 5 கார்களை பறிமுதல் செய்தனர். மேலும் முக கவசம் அணியாமல் வந்த 259 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
அதன்படி சேலம் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் போலீசாரின் தீவிர சோதனையில் 575 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கதாகும். இது குறித்து போலீசார் கூறும்போது வைரஸ் பரவலை தடுக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அப்போதுதான் வைரசை முற்றிலும் ஒழிக்க முடியும். எனவே மருத்துவ வசதி தவிர தேவையின்றி பொதுமக்கள் யாரும் மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களில் வெளியில் வர வேண்டாம் என்று கூறினர்.