ஈரோடு மாவட்டத்தில் 8 பெண்கள் உள்பட 21 பேர் கொரோனாவுக்கு பலி- புதிதாக 1,731 பேருக்கு தொற்று
ஈரோடு மாவட்டத்தில் 8 பெண்கள் உள்பட 21 பேர் கொரோனாவுக்கு பலியானார்கள். மேலும் புதிதாக 1,731 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் 8 பெண்கள் உள்பட 21 பேர் கொரோனாவுக்கு பலியானார்கள். மேலும் புதிதாக 1,731 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
புதிதாக 1,731 பேருக்கு தொற்று
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா வைரசின் 2-வது அலை மிகவும் வேகமாக பரவி வருகிறது. வைரசை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. எனினும் வைரசின் தாக்கம் குறைந்தபாடில்லை.
இந்த நிலையில் நேற்று ஈரோடு மாவட்டத்தில் புதிதாக மேலும் 1,731 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. இவர்களில் சிலர் வீட்டு தனிமையிலும், சிலர் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காகவும் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் மாவட்டத்தில் மொத்த பாதிப்பு 51 ஆயிரத்து 401 ஆக உயர்ந்தது.
21 பேர் பலி
மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக 10-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் இறந்து வந்தனர். இந்த நிலையில் நேற்று சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்ட பட்டியலின்படி 21 பேர் இறந்துள்ளனர். அதன்படி கொரோனாவுக்காக சிகிச்சை பெற்று வந்த ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 40 வயது ஆண் கடந்த 4-ந்தேதியும், 56 வயது ஆண் 10-ந்தேதியும், 60 வயது மூதாட்டி, 58 வயது பெண், 67 வயது மூதாட்டி ஆகியோர் 11-ந்தேதியும், 57 வயது ஆண் 14-ந்தேதியும், 69 வயது முதியவர் 15-ந்தேதியும், 70 வயது முதியவர் 20-ந்தேதியும், 78 வயது முதியவர், 80 வயது முதியவர் ஆகியோர் 22-ந் தேதியும் இறந்தனர். மேலும் 48 வயது பெண், 59 வயது ஆண், 65 வயது முதியவர், 86 வயது முதியவர் ஆகியோர் 23-ந்தேதியும், 62 வயது முதியவர், 60 வயது மூதாட்டி, 59 வயது பெண் ஆகியோர் 24-ந்தேதியும், 75 வயது முதியவர், 58 வயது பெண், 80 வயது மூதாட்டி ஆகியோர் 25-ந்தேதியும், 62 வயது முதியவர் 26-ந்தேதியும் இறந்தனர். இதனால் மாவட்டத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 311 ஆக உயர்ந்தது.
13,965 பேர் சிகிச்சை
அதேநேரம் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 1,246 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினர். மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 37 ஆயிரத்து 125 பேர் கொரோனா வைரசில் இருந்து மீண்டு உள்ளனர். இதேபோல் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. தற்போது மாவட்டம் முழுவதும் 13 ஆயிரத்து 965 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். முழு ஊரடங்கு அமலில் இருந்த போதும் கொரோனா வைரஸ் பரவல் குறைந்தபாடில்லை. எனவே தேவையில்லாமல் பொதுமக்கள் யாரும் வெளியே செல்ல வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.