தைலமரக்காட்டில் பிணமாக கிடந்த கொரோனா நோயாளி

ஜெயங்கொண்டம் அருகே தலைமரக்காட்டில் கொரோனா நோயாளி பிணமாக கிடந்தார். அவர் மனவேதனையில் மருத்துவமனையில் சிகிச்சை பெறாமல் சென்றாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2021-05-28 19:48 GMT
ஜெயங்கொண்டம்:

நெசவு தொழிலாளி
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள இலையூர் பகுதியை சேர்ந்தவர் சாமிநாதன் (வயது 60).  நெசவு தொழிலாளியான இவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து அவர் உடையார்பாளையம் அரசு மருத்துவமனையிலும், பின்னர் ஆண்டிமடம் அரசு மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இதையடுத்து மேல் சிகிச்சைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அவர் அனுப்பி வைக்கப்பட்டார். அரசு மருத்துவமனைக்கு உதவிக்கு யாருமில்லாமல் ஆம்புலன்சில் வந்து இறங்கிய அவர், அரசு மருத்துவமனைக்கு உள்ளே செல்லாமல் வெளியே சுற்றித்திரிந்ததாக கூறப்படுகிறது.
தைலமரக்காட்டில் பிணம்
இந்நிலையில் ஜெயங்கொண்டம் அருகே உள்ள மலங்கன்குடியிருப்பு தைலமரக்காட்டில் ஒருவர் பிணமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று பார்த்தபோது, இறந்து கிடந்தவர் சாமிநாதன் என்பதும், அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து அவரது உடல் ஜெயங்கொண்டம்-செந்துறை சாலையில் மீனம்பட்டி சுடுகாட்டில் உள்ள நவீன எரிவாயு தகன மேடையில் வைத்து எரியூட்டப்பட்டது. அவர் மனவேதனையில் சிகிச்சை பெறாமல் சென்றாரா? அல்லது மனநலம் பாதிக்கப்பட்டிருந்தாரா? என்பது உள்ளிட்ட கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்