திண்டுக்கல் மாவட்டத்தில் 25 தனியார் மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு சிகிச்சை
திண்டுக்கல் மாவட்டத்தில் 25 தனியார் மருத்துவமனைகளில் முதல்-அமைச்சர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது என்று கலெக்டர் விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
திண்டுக்கல் மாவட்டத்தில் முதல்-அமைச்சர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க 25 தனியார் மருத்துவமனைகள் அங்கீகாரம் பெற்றுள்ளது. இதில் 13 தனியார் மருத்துவமனைகள் திண்டுக்கல் நகர் பகுதியிலும், ஏ.வெள்ளோடு, சிறுமலை பிரிவு, காந்திகிராமம் ஆகிய இடங்களில் தலா ஒரு மருத்துவமனை என மொத்தம் 16 தனியார் மருத்துவமனைகளுக்கு முதல்-அமைச்சர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்க அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் பழனி பகுதியில் 3 மருத்துவமனைகள், ஒட்டன்சத்திரம் பகுதியில் 2 மருத்துவமனைகள், குஜிலியம்பாறை மற்றும் கொடைக்கானலில் தலா ஒரு மருத்துவமனை, நிலக்கோட்டையில் 2 மருத்துவமனைகள் என 25 தனியார் மருத்துவமனைகளில் பொதுமக்கள் கொரோனாவுக்கு இலவசமாக சிகிச்சை பெறலாம்.
தனியார் மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களுக்கு முதல்-அமைச்சர் மருத்துவ காப்பீட்டு திட்டம் மூலம் குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு ரூ.5 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.35 ஆயிரம் வரை சிகிச்சை கட்டணமாக வழங்கப்படுகிறது. மேலும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை செய்வதற்கும், சிகிச்சைக்கான மருந்துகளை வாங்குவதற்கு ஆகும் செலவுகளையும் அரசே ஏற்கும். மேலும் விவரங்களுக்கு 1800 425 3993/104 மற்றும் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம் அல்லது www.cmchistn.com என்ற இணையதளம் மூலமும் தெரிந்துகொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.